×

சேத்துப்பட்டு பகுதிகளில் தொடரும் அவலம்: செய்யாற்று படுகையில் இரவு நேரங்களில் மணல் திருட்டு

பெரணமல்லூர், நவ.13: சேத்துப்பட்டு பகுதிகளில் செய்யாற்று படுகையில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்கிறது. இந்த மணல் திருட்டிற்கு அதிகாரிகள் துணை போவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி கிராமம் வழியே செய்யாற்று படுகை செல்கிறது. இதை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்த ஆற்றுப் படுகையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில், மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுகிறது. இந்த மணல் திருட்டு குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: செய்யாற்று படுகையை ஒட்டியுள்ள நிலங்களில் பலர் விவசாயம் செய்து வருகிறோம். சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் வந்தது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து கிணறுகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியுடன் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், இரவு நேரங்களில் ஆற்றுப்படுகையில் இறங்கி மணலை திருடி சிலர் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.‌

குறிப்பாக, ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள மேட்டுக்குடிசை, சாணார்தோப்பு மற்றும் ஓதலவாடி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் மாட்டு வண்டியுடன் வரும் மணல் திருடர்கள், வளமான மணலை திருடி அருகில் எங்காவது பதுக்கி வைக்கின்றனர். பின்னர், குறிப்பிட்ட நேரத்தில் அந்த மணலை வெளியிடங்களுக்கு எடுத்து சென்று விற்று வருகின்றனர். இங்கிருந்து அருகிலுள்ள தேவிகாபுரம், போளூர், ஆரணி, கூடலூர், சதுப்பேரி மற்றும் களம்பூர் போன்ற பகுதிகளுக்கு மணல் கடத்தி செல்லப்படுகிறது. மணல் கடத்தல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும், அவர்கள் வந்து சேருவதற்குள் மணல் திருடர்களுக்கு தகவல் தெரிந்து விடுகிறது. இதனால் அவர்கள் தப்பிவிடுகின்றனர். அதிகாரிகள் மணல் கடத்தல் ஆசாமிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு தான் ரோந்து வருகிறார்கள் என தெரிகிறது.

சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றுப்படுகையில் சென்ற வெள்ளத்தால், வளமான மணல் குவியல் ஆற்றில் தங்கியுள்ளது. இந்த மணலை இரவு, பகலாக திருடி வருகின்றனர். மணல் திருட்டு நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, எங்கள் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மணல் வளம் காக்கவும், விவசாயத்தை காக்கவும் செய்யாற்று படுகையில் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Sediment areas ,
× RELATED சேத்துப்பட்டு பகுதிகளில் தொடரும்...