சாத்தனூர் ஊராட்சியில் பைப் லைன் உடைந்ததால் 6 மாதமாக பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

தண்டராம்பட்டு, நவ.13: தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சியில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தில் 6 மாதமாக உடைந்து கிடக்கும் பைப்லைனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு சார்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுகாதார வளாகத்திற்கு செல்லும் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீரின்றி சுகாதார வளாகம் காட்சி பொருளாக மாறியது.

இதனை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர் ஏழுமலையிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். அதற்கு அவர், பிடிஓ கவனத்திற்கு கொண்டு சென்று சீரமைத்து தருகிறேன் என தெரிவித்தாராம். ஆனால் இதுநாள் வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி  மகளிர் சுகாதார வளாகத்தில் உடைந்துள்ள பைப் லைனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : women's health complex ,Sathanur ,
× RELATED ஏஎப்டி பஞ்சாலை மூடப்படுகிறது