வேலூர் தீயணைப்பு நிலையத்தில் சிறைத்துறை அலுவலர்களுக்கு தீயணைப்பு பயிற்சி

வேலூர், நவ.13: வேலூர் தீயணைப்பு நிலையத்தில் சிறைத்துறை அலுவலர்களுக்கு தீயணைப்பு குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

வேலூர் ஆப்காவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறை கண்காணிப்பாளர்கள், ஜெயிலர்கள், துணை ஜெயிலர்களுக்கு சிறை நிர்வாகம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிறைக்கைதிகளை வழிநடத்தல், நல்வழிப்படுத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகம், டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர், துணை ஜெயிலர் என 35 அதிகாரிகள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.இப்பயிற்சியின் ஒரு பகுதியாக சிறைத்துறை அதிகாரிகளுக்கான தீத்தடுப்பு குறித்த பயிற்சி வேலூர் தீயணைப்பு நிலையத்தில் நேற்று நடந்தது. வேலூர் நிலைய அலுவலர் விநாயகம் தலைமை தாங்கினார். நிலைய அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தீ விபத்து ஏற்படுதல் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

 

காகிதம், மரக்கட்டை, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், பெட்ரோல், காஸ் என எளிதில் தீப்பற்றி எரியும் பொருட்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தீ விபத்துகளுக்கென தனித்தனியே உள்ள தீயணைப்பு கருவிகளை கையாள்வது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறைச்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துக்களை எவ்வாறு கையாள வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், சிறைச்சாலைகளில் தீ விபத்து ஏற்படும் காலங்களில் கைதிகளை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், தீ விபத்து ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது’ என்றனர்.

Related Stories:

>