×

வேலூர் சின்ன அல்லாபுரத்தில் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

வேலூர், நவ.13:  வேலூர் சின்ன அல்லாபுரத்தில் மேல்நிலைநீர்த்தேக்க ெதாட்டியில் இருந்து நிரம்பி வழியும் குடிநீர் சாலையில் ஓடி வீணாகிறது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வேலூர் சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த குடிநீர் தொட்டி தினமும் நிரம்பி வழிகிறது. இவ்வாறு நிரம்பி வழியும் தண்ணீர் அங்குள்ள தெருக்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. மேலும் இந்த தண்ணீர் அங்குள்ள பள்ளங்களில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது.

தற்போது டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் இறந்த சம்பவமும் நடந்துள்ளது. மேலும் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இவ்வாறு குடிநீர் வீணாவது ஒருபுறம் என்றால், இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான குடிநீர் ஆபரேட்டர்களின் கவனக்குறைவால் இதுபோன்ற சம்பவங்கள் நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் உள்ளது. எனவே இப்பிரச்னைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellore ,Allapuram Road ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...