×

பூதூர் விஏஓ அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்காமல் பொதுமக்கள் அலைக்கழிப்பு

அணைக்கட்டு, நவ.13:  பூதூர் விஏஓ அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்காமல் அலைக்கப்படுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தவிர்த்து கிராமங்களில் நடந்த பிறப்பு, இறப்பு சம்பவங்கள் 21 நாட்களுக்குள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு விஏஓ மூலமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
21 நாட்களுக்கு மேல் ஓராண்டுகள் வரை தாசில்தார், அதற்கு மேல் இருந்தால் ஆர்டிஓ வழங்கி வருகிறார். இதேபோல் அணைக்கட்டு தாலுகாவிலும் 21 நாட்களுக்குள் இருந்தால் விஏஓ அலுவலகங்களில் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஊசூர் அடுத்த பூதூர் விஏஓ அலுவலகத்திலும் பிறப்பு, இறப்புகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2 மாத்திற்கு முன்பு இறப்பு பதிவு ஒன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்தபோது ஒரே விண்ணப்பதிற்கு வேறு வேறு எண்கள் கொண்ட இரண்டு சான்றுகள் வந்தது. அதற்கு அடுத்த இறப்பு பதிவு செய்தபோதும் இதே போல் வந்ததாம்.இதனால், பதிவேற்றம் செய்வதை நிறுத்தி, இறப்பு சான்றிதழ் கேட்டு வரும் நபர்களிடம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் கோளாறு ஏற்படுகிறது. அவை சீரமைத்த பின்னரே சான்றிதழ் வழங்க முடியும் என கூறி வருகிறார். இதனால், கடந்த 2 மாதங்களில் கிராமங்களில் நடந்த 20க்கும் மேற்பட்ட இறப்பு சம்பவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாமலும், சான்றிதழ்கள் வழங்கப்படாமலும் உள்ளது. இதனால், சான்றிதழ் கேட்டு வருபவர்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

மேலும், அரசால் வழங்க கூடிய ஈமசடங்கு நிதி, குடும்ப தலைவர் இறப்பு நிவாரணம், வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ் உள்ளிட்ட எந்த சலுகைகளையும் பெற முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் வருவாய் ஆய்வாளர், தாசில்தாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, பூதூர் விஏஓ அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சம்பவங்கள் பதிவு செய்து அவர்களின் உறவினர்களிடம் உடனடியாக சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : evacuation ,death ,birth ,office ,Puthur VAO ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா