×

வேலூர் மாநகராட்சியில் சுகாதார சீர்கேட்டில் கலாஸ்பாளையம்

வேலூர், நவ.13: வேலூர் மாநகராட்சியில் கலாஸ்பாளையம் பகுதியில் உள்ள வீதிகள் சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேலூர் மாநகராட்சியின் பிரதான பகுதியாக விளங்குவது கலாஸ்பாளையம், ஓல்டு டவுன், கொசப்பேட்டை பகுதிகள். இதில் கலாஸ்பாளையம் மற்றும் ஓல்டு டவுன் பகுதிகள் குறுகிய தெருக்களை கொண்டவை. இங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டவை. அப்போதைய சூழலுக்கு ஏற்ப சிறிய அளவில் தண்ணீர் செல்லும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் சிறிது மழை பெய்தாலும் பல நாட்களுக்கு அப்பகுதிகள் கழிவுநீரின் பிடியில் சிக்கி பொதுமக்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கும்.
குறிப்பாக உத்திரிய மாதா கோயில் தெரு, புதிய டவுன் ஆஸ்பத்திரி தெரு, கலாஸ் தாதவாத்தியார் தெரு, கலாஸ் வளையல்கார தெரு, கலாஸ் பாகர்குண்டா தெரு,

ஜிபிஎச் ரோடு என பல தெருக்கள் கழிவுநீரின் பிடியில் சிக்கி பொதுமக்கள் நடமாடவே அஞ்சும் நிலையை உருவாக்கும். அதேபோல் இங்குள்ள குறுகிய சந்துகளில் மாநகராட்சி குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு பல நாட்கள் குப்பைகள் அகற்றப்படாமல் தெருக்களில் தேங்கி சாதாரண நாட்களிலும் கழிவுநீர் கால்வாய்களில் விழுந்து அடைப்பை ஏற்படுத்தி வீதிகளை கழிவுநீர் ஓடும் கானாறுகளாக மாற்றி விடுகின்றன. இவற்றை சுத்தப்படுத்த வேண்டிய துப்புரவு பணியாளர்களும் சரியாக வருவதில்லை. இவ்விஷயத்தில் மாநகராட்சியும் கண்டுெகாள்வதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் கலாஸ்பாளையம் பகுதி மக்கள். எனவே, இனிமேலாவது அங்கு பாதாள சாக்கடை கட்டமைப்புடன் வீடுகளை இணைத்தும், கழிவுநீர் கால்வாய்களை அகலப்படுத்தி மழைநீர் கால்வாய்களாக உருமாற்றவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...