×

நலத்திட்டம் வழங்கும் விழா பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும் தமிழக அரசு கைவிடாது: அமைச்சர் பேச்சு

திருப்பத்தூர், நவ.13: திருப்பத்தூர் அருகே நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும் தமிழக அரசு கைவிடாது என்று அமைச்சர் பேசினார். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், வருவாய் அலுவலர் பார்த்தீபன், சப்-கலெக்டர் வந்தனா கர்க், மாவட்ட தனி அலுவலர் சிவனருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு 3,734 பயனாளிகளுக்கு ₹2 கோடியே 80 லட்சத்து 81 ஆயிரத்து 501 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக அரசு தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், முதியோர் உதவித்தொகை, பசுமை வீடு, திருமண உதவித்தொகை, மாணவ, மாணவிகளுக்காக கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம் போன்றவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பட்டா இருந்தால் போதும், பசுமை வீடு கட்ட உடனடியாக நிதி ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குறைகள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் அந்தந்த தாசில்தார் மற்றும் வருவாய் துறையினரிடம் தயங்காமல் தெரிவிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். அரசாங்கத்தை தேடி மக்கள் வந்த காலம் மாறி, தற்போது மக்களை தேடி அரசாங்கம் வருகிறது. மேலும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும் தமிழக அரசு உங்களை கைவிடாது. இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல், அரசு அதிகாரிகளும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் பார்த்திபன் வரவேற்றார். பயனாளிகளுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நல துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர்.
விழாவில் 1274 பயனாளிகளுக்கு ₹5 கோடியே 40 லட்சத்து 35 ஆயிரத்து 907 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி தாசில்தார் உமாரம்யா, மண்டல துணை தாசில்தார் திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

வாணியம்பாடி: வாணியம்பாடி தனியார் ஆண்கள் கல்லூரி அரங்கில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். டிஆர்ஓ பார்த்தீபன், முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் முன்னிலை வகித்தனர். இதில் வணிகவரி  மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழி லாளர்  நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் கலந்து கொண்டு வாணியம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 930 பயனாளிகளுக்கு ₹1 கோடியே, 71 லட்சத்து 79 ஆயிரத்து 515 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  காமராஜ், தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசு விழா அதிமுக கட்சியின் மேடையாக மாறியது
அரசு விழா மேடையில் அதிமுக பதவியில் இல்லாத நிர்வாகிகள் ஆக்கிரமித்து கொண்டனர். இதனால், அரசு அதிகாரிகள் இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தனர். மேலும், அரசு விழாவின் போது கட்சியினர் யாரும் விழா மேடையில் அமரக்கூடாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினருக்கு அறிவித்திருந்தார். ஆனால், நேற்று நடந்த முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் மேடையில் அதிமுகவின் கட்சி மேடை போல் இருந்தது. மேலும், பலதுறை அதிகாரிகள் மேடையில் இடமில்லாமல் நின்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Govt ,
× RELATED புதிய குடும்ப அட்டைகள்...