×

காட்டு யானையை பிடிக்க விடிய, விடிய காத்திருந்த வனத்துறை

பொள்ளாச்சி, நவ. 13:  பொள்ளாச்சி அருகே அட்டகாச யானையை பிடிக்க வனத்துறையினர் விடிய விடிய காத்திருந்தனர். மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த நவமலையிலிருந்து, சில மாதத்திற்கு முன்பு இடம் பெயர்ந்த ஒற்றை காட்டு ஆண் யானை, அர்த்தநாரிபாளையம், பருத்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது.  இந்த யானை அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்கள், மரங்களை நாசப்படுத்துவது, குடிசை வீடுகளை இடித்தும் சூரையாடுவது என தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும், யானை தாக்கி விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் இறந்தார். திருமாத்தாள் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்ததால் ஒற்றை யானை பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.   இதையடுத்து, வனத்திலிருந்து இரவு நேரத்தில் கிராம பகுதிக்கு புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மறியல் போராட்டத்திலும் மக்கள்  ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, காட்டு யானையை பிடிக்க அர்த்தனாரிபளையத்தில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, வனச்சரகர் காசிலிங்கம், மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட வன அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் முகாமிட்டனர்.

அட்டகாச யானையை பிடிக்க டாப்சிலிப் முகாமிலிருந்து கலீம் மற்றும் பாரி என 2 கும்கி யானைகள் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டன. காட்டு பகுதியில் யானை நின்ற இடத்தை நோக்கி வனத்துறையினர் புறப்பட்டனர். ஆனால், காட்டு யானை அங்கிருந்து நகர்ந்து வராமல் எல்லைப்பகுதி வனத்திற்குள்ளே நின்று கொண்டது. இதையடுத்து, அந்த யானை நிற்கும் இடத்திற்கு சென்று, விரும்பும் உணவு படையலிட்டு அதனை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கினர். ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை அவ்வப்போது மழை பெய்ததால், அட்டகாச காட்டு யானை அங்கிருந்து நகர்ந்து தோட்ட பகுதிக்கு வராமல் நின்று கொண்டது. இரவில் யானையை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.   மேலும் அந்த யானை அடர்ந்த வனத்திற்குள் சென்று மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. யானையை பிடிக்க விடிய விடிய காத்திருந்த வனத்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  இதைத்தொடர்ந்து நேற்று காலை, வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில், வேட்டைத்தடுப்பு காவலர்கள், வனவர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட வனக்குழுவினர் கும்கி கலீமை அழைத்து சென்று, மறைவான இடத்தில் நிற்கும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், உயர்ந்த மலைபோன்ற பாறை பகுதிகளில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் நின்று யானையை கண்காணிப்பதை தொடர்ந்தனர்.

கும்கிகள் உதவியுடன் அட்டகாச யானையை பிடித்ததும், அதனை, வரகளியாறு முகாமில் உள்ள கூண்டில் அடைப்பதற்காக கொண்டு செல்ல 2 லாரிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று மாலையில் ஒற்றை யானை கண்ணில் தென்பட்டுள்ளது. அதனை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.    இது குறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், ‘‘இந்த ஆண் யானை இரவு நேரத்தில் மட்டும் கிராமம் அருகே உள்ள தோட்டத்திற்கு வருகிறது. ஆக்ரோஷமாக இருக்கும் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வரகளியாறில் உள்ள கிராலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கும்கி யானைகள் உதவியுடன், அட்டகாச யானை நிற்கும் இடத்தை கண்காணிக்கும் பணி நடக்கிறது.  இதற்காக 10 பேர் கொண்ட 3 குழு அமைக்கப்பட்டுள்ளன. அந்த யானை நிற்கும் இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்து மயக்க ஊசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை பெய்யாமல் இருந்தால், வனத்திலிருந்து ஒற்றை யானை வந்துவிடும். அதனை பிடிக்க எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்’ என்றார்.

யானை பிடிபட விநாயகர் கோயிலில் வழிபாடு
பொள்ளாச்சி அருகே பல கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை காட்டு யானையை பிடித்து செல்ல வனத்துறையினர் போராடி வருகின்றனர். ஆனால் அந்த யானை, வனத்துறையினருக்கு டிமிக்கு கொடுத்து வனத்திலிருந்து வெளியேறாமல் உள்ளது. இதையடுத்து அர்த்தனாரிபாளையம் அருகே பெருமாள் கோயில் மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயில் நேற்று மதியம், யானை பிடிபட வேண்டும். விரைந்து வனத்துறையினர் பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

மதம் பிடித்த கும்கி பாரி முகாமிற்கு அனுப்பப்பட்டது
அர்த்தனாரிபாளையம் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானையை பிடிக்க, டாப்சிலிப் அருகே கோழிக்கமுத்தி முகாமிலிருந்து கலீம் மற்றும் பாரி என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இதில் கும்கி பாரிக்கு நேற்று திடீர் என மதம் பிடித்தது. அதன் அருகே யாரையும் விடாமல் சிறிதுநேரம் பிளீறியது.  சிறிதுநேரத்தில் சோர்ந்து படுத்துகொண்டது. அட்டகாச யானையை விரட்டி பிடிக்க பாரிக்கு தெம்பு இல்லையென்று கூறப்படுகிறது.  இதையடுத்து கால்நடை மருத்துவ குழுவினர், பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின் பாகன் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்புடன், கும்கி பாரி யானை லாரியில் ஏற்றப்பட்டு, மீண்டும் டாப்சிலிப் அருகே உள்ள முகாமில் விடப்பட்டது. இருப்பினும்,  பாரிக்கு பதிலாக ராஜீவ்வரதன் என்ற கும்கி யானை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Forest Department ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...