×

மத்திய அரசை கண்டித்து டேங்கர் லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ. 13:  பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் டேங்கர் லாரி ஓட்டுனர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 47 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்றுள்ளது. இந்த நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோவை இருகூர் பாரத் பெட்ரோலிய ஆலையின் முன்பு சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் டெம்போ ரபீக் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ரபீக், பிபிசி டேங்கர் லாரி ஓட்டுனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜசேகர், செல்வராஜ், கார்த்தி, அப்துல்கலாம் உள்பட பலர் பங்கேற்றனர்.

 இதில், டேங்கர் லாரி ஓட்டுனர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும்.  ஓட்டுனர்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க பிபிசி வளாகத்தில் உணவுவிடுதி அமைத்திட வேண்டும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி ஓட்டுனர்களின் வேலை நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து ஓட்டுனர்களுக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ., உள்ளிட்ட சலுகைகளை நிறைவேற்று வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பிபிசி டேங்கர் லாரி ஓட்டுனர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : Tanker lorry drivers ,government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...