அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அவிநாசி, நவ. 13:   குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அவிநாசி ஒன்றியம் தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி இராமியம்பாளையம் அய்யன்காடு காலனி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) லட்சுமி சாந்தியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி ஒன்றியம் தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட இராமியம்பாளையம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் ஆழ்துளை குழாய் கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்தும், ஒரு மாத காலமாக மின் மோட்டார் பழுதடைந்து குடிநீர் விநியோகம் செய்யவில்லை. குடிநீர் குழாய்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கிராம சபைக்கூட்டத்தில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.  இந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) லட்சுமி சாந்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பனிமலர் ஆகியோர் கூறுகையில், ‘‘தொடர்மழை காரணமாக சேறும் சகதியும் அதிகளவு வந்ததால், குடிநீர் குழாயில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் அடைப்புகளை நீக்கி, உடனடியாக குடிநீரை வழங்கப்படும்,’’ என்று உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Siege ,facilities ,Parakari Panchayat Union ,
× RELATED பழங்குடியினர் என அறிவிக்கக்கோரி...