×

போடிப்பட்டி ஊராட்சியில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் முயற்சி

உடுமலை, நவ. 13:     உடுமலை  ஒன்றியம் போடிப்பட்டி ஊராட்சி சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் 1100  வீடுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த  கிராமத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து கணக்கம்பாளையம் கூட்டுகுடிநீர்  திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது.  இந்த கிராமத்தில், 400 வீடுகள்  இருந்தபோது, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி  கட்டப்பட்டது. தற்போது, மக்கள் தொகை உயர்ந்த பிறகும், அதே தொட்டி மூலமே  குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 4 நாட்களுக்கு ஒருமுறை ஒரு குடம்  தண்ணீர்தான் கிடைக்கிறது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: ஏற்கனவே  தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகிறோம். இந்நிலையில், கடந்த 20 நாட்களாக  தண்ணீர் வரவில்லை. 4 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இதில் ஒன்றுதான் வேலை  செய்கிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஊராட்சி  செயலர் கிராமத்திலேயே இருப்பதில்லை. குப்பையும் அள்ளப்படுவதில்லை என்றனர்.

தண்ணீர்  வராததால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் 150க்கும் மேற்பட்டோர் நேற்று காலை  10.30 மணியளவில், காலி குடங்களுடன் உடுமலை-பொள்ளாச்சி சாலை ராகல்பாவி  பிரிவில் மறியல் செய்ய திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்த உடுமலை  வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  செண்பகவள்ளி, சிங்காரவேலு, குடிநீர் பிரிவு பொறியாளர் சேவியர் ஆகியோர்  சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  தொடர்ந்து மக்களின் கோரிக்கைகளை நோட்டில் பதிவு செய்த அதிகாரிகள், இன்னும்  15 நாட்களில் குடிநீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதி அளித்தனர். மேலும், கிராமங்களில் மரம் வளர்க்க வேண்டும் என  அறிவுறுத்தினர். உடனே பொதுமக்கள், குடிக்கவே தண்ணீர் இல்லை, மரம் எப்படி  வளர்ப்பது என கேள்வி எழுப்பினர். ஆனால்
அதிகாரிகள் பதில் எதுவும் கூறவில்லை. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : road ,Bodipatti ,
× RELATED குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி...