×

தொழில் நகரில் தினசரி கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் இழுத்து மூடல்

திருப்பூர், நவ. 13:   திருப்பூர் தொழில் நகரில் பெரும்பாலான சிறு, குறு பவர் டேபிள் நிறுவனங்களுக்கு போதிய ஜாப்-ஆர்டர் இன்றி இழுத்து மூடப்பட்டதால், வட்டிக்கு பணம் கொடுத்த 100க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் நஷ்டமடைந்து மூடப்பட்டது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பணத்தை திரட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.  திருப்பூரில் நூல்மில், நிட்டிங், சலவை பட்டறை, சாயமேற்றுதல், பிரிண்டிங், கம்பேக்டிங், கட்டிங், எம்ப்ராய்டிங், தையல், பட்டன், செக்கிங், அயர்ன், பேக்கிங் என பல கட்டங்கள் வழியாக பின்னலாடை உற்பத்தி முழுமையடைகிறது. இதன் ஒவ்வொரு தொழில் பிரிவிலும் நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்களும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் திருப்பூரில் இயங்கி வருகிறது. இதுதவிர  போக்குவரத்து, மெக்கானிக், ஒயரிங், சில்லறை வர்த்தகம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் விளங்குகிறது. கார்பரேட் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சொத்தின் பேரில் கோடிக்கணக்கில் கடன் வழங்கப்படுகிறது. இதனால், பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்கின்றனர். சிறு, குறு நடுத்தர ஜாப்-ஒர்க் பின்னலாடை உற்பத்தியாளர்கள் வாடகை கட்டடத்தில் பவர்-டேபிள் இயந்திரங்களை அமைத்து கார்பரேட் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆடைகளை தைத்து கொடுக்கின்றனர்.

 இதற்கான கூலி தொகையை 60 நாட்கள் முதல் 90 நாட்கள் இடைவெளியில் தருகின்றனர். அது வரை கட்டடங்களுக்கு வாடகை, தொழிலாளர்களுக்கு சம்பளம், மின் கட்டணம், எரிபொருள் செலவு உட்பட பல்வேறு பணத்தேவைக்காக நிதி நிறுவனங்களில் கடன் வாங்குகின்றனர். இதில் கடன் தொகை ஆயிரத்துக்கு தினமும் ரூ.10 என்ற அடிப்படையில் ரூ.10 ஆயிரத்திற்கு தினமும் ரூ.100 வீதம் 100 நாட்களில் கடனை அடைக்க வேண்டும். ரூ.10 ஆயிரம் பணம் கொடுக்கும் போது ரூ.ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ரூ.9 ஆயிரம் கொடுக்கின்றனர். பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பின் அனைத்து தொழில் நிறுவனங்களும் வரிவிதிப்புக்குள் வந்தது.  இதை தொடர்ந்து பல ஆண்டுகளாக பில் இன்றி ஆடைகளை விற்பனை செய்த சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு ஜாப்-ஒர்க் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திக்கொண்டனர். நம்பிக்கையின் அடிப்படையில் கடன் கொடுத்த நிதி நிறுவனங்களுக்கு முதல் பறிபோனது. இதனால், 100க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு சென்றனர். சொத்தின் பேரில் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மட்டுமே திருப்பூரில் நிலைத்து வட்டி தொழில் செய்கின்றனர். இதனால், தற்போதுள்ள சிறு, குறு ஜாப்-ஒர்க் பவர் டேபிள் நிறுவனங்கள், பேக்கரிகள், ஓட்டல்கள் ஆகியவற்றின் தற்காலிக பணத்தேவைக்கு பணம் இன்றி அவதிப்படுகின்றனர்.

 இது குறித்து நிதி நிறுவனத்தின் உரிமையாளர் கூறியதாவது: திருப்பூர் தொழில் நகரை நம்பி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கிராமத்திலிருந்து இங்கு வந்தேன். அப்போது ரூ.10 லட்சம் பணத்தோடு திருப்பூருக்கு வந்தேன்.  இன்று பல கோடி சம்பாதித்துள்ளேன். தற்போது தினசரி வசூல் தலைகீழாகமாறியுள்ளது. ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் நடத்துபவர்கள் பெரும்பாலும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளியாக இருந்து அனைத்து வேலைகளையும் தெரிந்து ஜாப்-ஒர்க் எடுத்துச்செய்கின்றனர். இவர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் பணம் கொடுக்கின்றோம். தற்போது பின்னலாடை உற்பத்தி செய்யும் கார்பரேட் நிறுவனங்கள் நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்து குறைவான தொழிலாளர்களை கொண்டு அதிகமாக உற்பத்தி செய்கின்றனர். கார்பரேட் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் ஆர்டர்களுக்கு ஏற்றால் போல் நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்து அதிகமான உற்பத்தியை ஏற்படுத்திக்கொண்டனர்.

 இதனால், பெரும்பாலான ஜாப்-ஒர்க் பவர் டேபிள் நிறுவனங்களுககு ஆர்டர்கள் குறைந்து, தொழிலை நடத்த முடியாமல் இரவோடு இரவாக தலைமறைவாகியுள்ளனர். இவர்களை நம்பி பணம் கொடுத்துள்ள நிதி நிறுவனங்களின் உரிமையாளர்கள் பல லட்சம் பணத்தை இழந்து தங்களுடைய சொந்த கிராமங்களுக்கே சென்றுவிட்டனர்.  நாங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு கடன் கொடுத்துள்ளதால், அவர்கள் முறையாக பணம் செலுத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து நிதி நிறுவனங்களை நடத்துகிறோம். இவ்வாறு கூறினார்.

Tags : closure ,finance companies ,city ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...