×

கீழ்பவானி வாய்க்கால் கரை சீரமைப்பு பணி 90 சதவீதம் நிறைவு

சத்தியமங்கலம், நவ.13:   பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வரை 124 மைல் நீளத்தில் வெட்டப்பட்ட கீழ்பவானி பிரதான வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆக.16ம் தேதி அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகளில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களுக்கு நெல் பயிரிட விநாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந் நிலையில், கடந்த 7ம் தேதி மாலை சத்தியமங்கலம் அருகே மில்மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் கரை உடைந்து தண்ணீர் அப்பகுதியில் உள்ள நெல், கரும்பு, வாழை பயிரிடப்பட்ட விவசாய விளைநிலங்களில் புகுந்ததோடு 5 கிராமங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து, பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பொக்லைன் உதவியுடன்  மண்கரை அமைக்கும் பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தரைமட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்திற்கு மண் கரை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை பணிகள் நிறைவு பெறும் என்பதால்  பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு கரை உடைப்பு சரி செய்த பகுதியில் தண்ணீர் கசிகிறதா என கண்காணிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி