×

காலி பணியிடங்களை நிரப்ப கோரி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி

ஊட்டி, நவ. 13: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டியில் கவன ஈர்ப்பு ேபரணி நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் 500 சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்கள் என 800க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். ஏராளமான காலி பணியிடங்கள் இருப்பதால் ஒரே அமைப்பாளர் மூன்றுக்கும் மேற்பட்ட மையங்களை கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வேலை பளு அதிகரிக்கிறது.  எனவே சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 35 ஆண்டுகாலம் ஒரே துறையில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும். வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணி கொடையாக ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும். 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பள்ளி சத்துணவு மையங்களை மூடுவதை தடுக்க வேண்டும்.

எரிவாயு சிலிண்டர்கள் வழங்கிட வேண்டும். உணவூட்டு செலவு மானியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு பேரணி நடந்தது.  நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கேசினோ சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடந்தது. பேரணிக்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயா தலைமை வகித்தார்.
மாவட்ட துணை தலைவர் மணி வரவேற்றார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஆனந்தன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nutrition staff rally ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்