×

குடியிருப்புகளுக்குள் மழை நீர் ஊட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்

ஊட்டி, நவ. 13: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் மழை நீர் குடியிருப்புக்களுக்குள் புகுந்தததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் நகராட்சி கழிவு நீர் கால்வாய் செல்லும் கரையோரங்களில் உள்ளன. பெரும்பாலான வீடுகள் சாதாரண வீடுகளே. தாழ்வான பகுதிகளில் உள்ளதாலும், நகரின் மழைப் பகுதியில் செல்லும் இந்த கால்வாயில் முறையாக தூர் வாரப்படாததாலும், சாதாரண மழை பெய்தால் கூட கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புக்களுக்குள் மழை நீர் சென்று விடுகிறது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின் போது, இப்பகுதியில் மழை நீர் குடியிருப்புக்களுக்குள் தேங்கி நின்றதால், மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.  அப்போதும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் கால்வாயில் தூர்வாரி மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால், இதுவரை தூர்வாரப்படாத நிலையில், மழை பெய்தால் தற்போது இப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

 இந்நிலையில், நேற்று இரவு பெய்த மழையால் மீண்டும் காந்தல் பகுதியில் உள்ள திருவள்ளூவர் காலனி உட்பட சில தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், இரவு முழுக்க அந்த தண்ணீரை வெளியேற்றி உறக்கமின்றி இருந்துள்ளனர். மழை நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை ஊட்டி - காந்தல் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து அங்கு வந்த ஊட்டி ஜி1 காவல்நிலைய ஆய்வாளர் விநாயகம் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கால்வாயில் தூர் வாரி, மழை நீர் குடியிருப்புக்களுக்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த பின் பொதுமக்கள் கலைந்துச் சென்றனர். இதனால், இப்பகுதியில் நேற்று சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Tags : road ,rain water fountains ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...