×

கல்லட்டி பாதையில் இரவு நேர அனுமதி கோரி மசினகுடியில் 18ம் தேதி உண்ணாவிரதம்

ஊட்டி, நவ. 13: இரவு நேரங்களில் மசினகுடி பகுதிக்கு உள்ளூர் மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 18ம் தேதி மசினகுடியில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
நீலகிரிக்கு கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கடந்த ஆண்டு வரை மசினகுடி வழியாக சென்று வந்தனர். அதேபோல், கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்பவர்களும் மசினகுடி வழியாக சென்றனர். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர்.  இவர்கள், சென்ற கார் விபத்தில் சிக்கி மூன்று நாட்கள் கழித்தே வெளியில் தெரிந்தது. இதனால், இவ்வழித்தடத்தில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இன்று வரை நீடிக்கிறது. மேலும், உள்ளூர் மக்களான மசினகுடி பகுதி மக்கள் செல்லவும் இச்சாலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது காவல்துறை. இந்நிலையில், பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், மசினகுடி பகுதி மக்கள் மற்றும் நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் செல்ல காவல்துறை அனுமதித்தது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் வேறு மாவட்ட பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் இருந்தாலும், உள்ளூர் வாகனம் என்பதற்கான ஸ்டிக்கர் ஒன்றையும் வழங்கியது. இதன் மூலம் மசினகுடி மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இவ்வழித்தடத்தில் சென்று வந்தனர்.   சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில்,  மசினகுடி பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு மசினகுடி பகுதியில் யானை வழித்தடங்களில் இருந்த காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்டுக்களும் மூடப்பட்டன. இதனால், சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து மசினகுடி பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில், தற்போது எந்த ஒரு அவசர தேவைகளுக்காக வெளியூர் சென்று திரும்பும் மசினகுடி பகுதி மக்கள் இரவு 9 மணிக்கு மேல் வந்தால், அவர்களை கல்லட்டி வழித்தடத்தில் செல்ல போலீசார் அனுமதிப்பதில்லை. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்துக் கொண்டு விடியும் வரை தலைகுந்தா சோதனை சாவடியில் அல்லது கல்லட்டி சோதனை சாவடியில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மசினகுடி பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.  இந்நிலையில், போலீசாரை கண்டித்தும், கல்லட்டி வழித்தடத்தில் மசினகுடி பகுதி மக்கள் எந்நேரமும் சென்று வர மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும். மசினகுடி - மாயார் சாலையில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006ஐ அமல்படுத்த வேண்டும். பழங்குடியினருக்கு வாழ்வுரிமை அளிக்கப்பட்டது போல், அங்கு வாழும் பிற மக்களுக்கும் வாழ்வுரிமை சட்டம் அமல்படுத் வேண்டும் என்பன உட்பட பல்வேறு முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி வரும் 18ம் தேதி திங்கட்கிழமை மசினகுடி பகுதியில், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து அன்றைய தினம் அப்பகுதியில் கடையடைப்பு மற்றும் வாகனங்கள் இயக்காமல் வியாபாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags : road ,Masinagudi ,Kallatti ,
× RELATED உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ..!!