ஈரோடு மார்க்கெட்டில் வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது

ஈரோடு, நவ.13:  ஈரோடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. நேற்று கிலோ ரூ50க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோட்டில் ஆர்கேவி ரோட்டில் உள்ள நேதாஜி தினசரி மார்க்கெட், சின்ன மார்க்கெட், சூரம்பட்டி சந்தை, வார சந்தைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டுகளில் ஈரோட்டின் சுற்றுப்புற பகுதிகளான சத்தியமங்கலம், பண்ணாரி, தாளவாடி, கொடுமுடி, சாவடிபாளையம் போன்ற பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயமும், ஆந்திரா, மத்திய பிரதேசம், நாசிக், கர்நாடகா போன்ற வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயமும் விற்பனைக்கு வருகிறது.இதில், ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் மிகப்பெரியது என்பதால், பெரிய வெங்காயம் மொத்தமாக இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் வெங்காயம் உற்பத்தி ஆகும் பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்கிருந்து ஈரோட்டிற்கு வெங்காயம் வரத்து குறைந்தது. இதனால், கடந்த வாரம் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது.  

இதனால் சாதாரண மக்கள் மற்றும் ஓட்டல் கடை உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், ஈரோடு மார்க்கெட்டிற்கு கடந்த 2 நாட்களாக வெங்காயத்தின் வரத்து அதிகரித்திருப்பதால், விலை குறைந்து நேற்று அதிகபட்சமாக கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து ஈரோடு மார்கெட் வியாபாரி கூறுகையில்,`ஈரோடு பெரிய மார்கெட்டுக்கு கடந்த வாரம் குறைந்து அளவே வெங்காயம் வந்தது. இதனால், மொத்த விலையிலேயே ரூ.70க்கு விற்பனை செய்தோம். வெளி கடைகளில் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் அந்த நிலைமை அப்படியே மாறி விட்டது. ஏனென்றால், மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து வழக்கத்தை விட 30 டன் கூடுதலாக 180 டன் வெங்காயம் வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சமாக 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலையை கேட்டதும் வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்’ என்றார்.

Related Stories:

>