நாகர்கோவில், நவ.13 : நாகர்கோவிலில் ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் கொள்ளையர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே நுழைந்தனர். பெரிய அளவில் பணம், நகைகள் இல்லாமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். நாகர்கோவில் சைமன்நகர் பூங்கா அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன். மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ெஜனட் கமலம். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகன்கள் சென்னையிலும், ஒரு மகன் அமெரிக்காவிலும் உள்ளனர். மற்றொரு மகன் கிளமன்ட் பென் மகாராஷ்டிராவில் வனத்துறை உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கிளமண்ட் பென்னும், தமிழக ஏடிஜிபி சைலேந்திரபாபுவும் ஒரே குடும்பத்தில் பெண் எடுத்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள மகன்களை பார்க்க விஸ்வநாதன் தனது மனைவியுடன், வீட்டை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வீட்டு பணியாள் வந்த போது, வீட்டின் இடது பக்க ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தன. இது குறித்து விஸ்வநாதன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். நேசமணிநகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். வீட்டின் சாவி இல்லாததால், பின் பக்க கிரில் கேட்டை அறுத்து, போலீசார் உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் இருந்த 4 பீரோக்கள் மற்றும் ஷோகேஸில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே சிதறி கிடந்தன. சில பேக்குகள் மற்றும் சூட்கேஸ்கள் காலியாக இருந்தன. அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து விஸ்வநாதனிடம் போலீசார் போனில் விசாரித்தனர். அப்போது வீட்டில் உள்ள புகைப்படத்தின் பின்புறம் 5 பவுன் தங்க நகை வைத்திருப்பதாக கூறினார். இதையடுத்து அந்த புகைப்படத்தை பார்த்த போது, அதன் பின் 5 பவுன் செயின் இருந்தது. எனவே நகைகள் கொள்ளை போனதாக தெரிய வில்லை. பீரோவில் நகை, பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். ஆனால் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. வீட்டில் 4 மகன்களுக்கும் தனித்தனியாக அறைகள் உள்ளன. அந்த அறைகளில் இருந்த பீரோக்கள், அலமாரிகளும் திறந்து இருந்தன. அவற்றிலும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே விஸ்வநாதன் வந்த பின்னரே, கொள்ளை நடந்ததா? என்பது பற்றி உறுதியாக கூற முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து ஓடிய நாய் வீட்டை சுற்றியே வந்தது. இந்த சம்பவம் குறித்து தற்போது நேசமணிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்காணிப்பு கேமிரா இல்லை
நாகர்கோவில் நேசமணிநகர் சைமன்நகர் பகுதி என்பது வி.ஐ.பி.க்கள் நிறைந்த பகுதி ஆகும். பல தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் இங்கு தான் வசிக்கிறார்கள். கொள்ளை முயற்சி நடந்துள்ள விஸ்வநாதன் வீட்டை சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லை. எனவே கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதிக்கு வரும் ரோட்டில் எங்காவது கேமிரா உள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள்.