×

புளியங்குடி முப்பெரும் தேவியர் கோயிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை

புளியங்குடி,  நவ. 13: புளியங்குடியில் அரசு மருத்துவமனை அருகே உள்ள முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோயிலில் மாதந்தோறும்  பவுர்ணமியன்று சிறப்பு பாலாபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடைபெறுவது வழக்கம். ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பாலாபிஷேகம், திருவிளக்கு பூஜை வெகுவிமரிசையாக நடந்தது. காலை 5.30 மணியளவில் கோயில் குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். மாலை 6.30 மணிக்கு முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சையரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீறு, தயிர், குங்குமம், தேன், சந்தனம் உள்பட 21 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டரில் சிறப்பு பாலாபிஷேகமும், சிறப்பு வருணபூஜையும் நடைபெற்றது.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது. முப்பெரும்தேவியருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து  தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபமேற்றி பாடல்கள் பாடினர். பவுர்ணமி பூஜையை முன்னிட்டு இரவு சிறப்பு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். முந்தல் மலையில் உள்ள கற்பகநாச்சியார் அம்மன் கோயிலில் பவுணர்மி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது.

கிருஷ்ணபுரம் ரகுபதி குழுவினரின் பஜனை கச்சேரியுடன் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள குற்றாலநாதர் பாபநாச நாதர், சுயம்புதூர் நாதருக்கு பாலாபிஷேகம் நடந்தது. கோயிலில் உள்ள சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு பவுர்ணமி பூஜை, பல்வேறு மலர்களால் நடை பெற்றது. பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags : Purnami ,Puliyankudi temple ,
× RELATED முத்தான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு..!!