×

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா

தென்காசி, நவ. 13: நெல்லை மாவட்ட சிவாலயங்களில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். 35வது ஆண்டு அன்னாபிஷேகம், நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் கும்பபூஜை, காசிவிசுவநாதர்,  உலகம்மன், பாலமுருகனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அன்னாபிஷேக மற்றும் பிரதோஷ குழுவை சேர்ந்த பக்தர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் தென்காசி ஆனைப்பாலம் மேலச்சங்கரன்கோயிலிலும் அன்னாபிஷேக விழா நடந்தது. காலையில் கணபதிஹோமம், தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர். கல்லிடைக்குறிச்சி உலோபா முத்திரை அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோயிலில் 18வது அன்னாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு கும்ப பூஜை, ஹோமங்களை தொடர்ந்து மூலவர் அகஸ்தீஸ்வரருக்கு மாப்பொடி, மஞ்சள், திரவியம், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது.

மதியம் 12 மணிக்கு உற்சவர் அபிஷேகத்தை தொடர்ந்து கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து அன்னாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான சுற்று வட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர்கள் சங்கரநாராயணன், சங்கரன், சுப்பிரமணியன் ஆலோசகர்கள் சங்கரலிங்கம், சுப்பிரமணியன், அர்ச்சகர்கள் பிச்சுமணி, காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான சுற்று வட்டார பகுதி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அம்பை காசிநாத சுவாமி கோயில், அம்மையப்பர் கோயில், திருமூலநாதசுவாமி கோயில், ஊர்க்காடு கோடியப்பர் கோயில், சிவசக்தி பாலா கோயில், பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

நவகைலாயங்களில் 2வது ஸ்தலமான சேரன்மகாதேவி ஆவுடையம்மன் சமேத அம்மநாதசுவாமி கோயிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் ராமசாமி கோயில் தெருவில் உள்ள விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோயில், பாரதியார் தெரு காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சோமசுந்தரி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், பேருந்து நிலையம் அருகில் உள்ள வைத்தியநாதசாமி கோயில் ஆகியவற்றிலும் அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

கீழப்பாவூர் - சுரண்டை ரோட்டில் மேலப்பாவூர் குளம் அருகே 1100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர்  கோயிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கீழப்பாவூர் குருக்கள்மடம் சிவலோகநாதர் ஜீவசமாதியில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சிவலோகநாதருக்கு சிறப்பு பூஜைகள், அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கீழப்பாவூர், கோட்டையூர், கருமடையூர், பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, சண்முகபுரம், கல்லூரணி, செட்டியூர் உட்பட பல ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். கடையம் வில்வவன நாதர் - நித்ய கல்யாணி அம்பாள் கோயிலில் நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. காலை சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து அன்னாபிஷேகம், சிறப்பு தீபாராதனை, பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதேபோல் ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.

Tags : festival ,Annabishekha ,eve ,moon ,Shivalayas ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...