×

அதிக வாகன போக்குவரத்தால் குண்டும் குழியுமாக மாறிய சிறுசேரி - மேடவாக்கம் சாலை

திருப்போரூர்: அதிக வாகன போக்குவரத்தால், சிறுசேரி - மேடவாக்கம் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை, சோழிங்கநல்லூரை அடுத்து வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக சிறுசேரி உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் ஏராளமான வீட்டுமனைப் பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.மேலும், இங்கிருந்த 800 ஏக்கர் விவசாய நிலம் சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவாக மாற்றப்பட்டு, 50க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது குக்கிராமமாக இருந்த சிறுசேரி, சென்னைக்கு இணையான  வளர்ச்சியோடு காணப்படுகிறது. இதனால் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.இங்கு புதிய கட்டுமான பணிகள் நடப்பதால், ஏராளமான கனரக வாகனங்களும் செல்கின்றன. பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்தும், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் இருந்தும் சிறுசேரி செல்ல சாலைகள் உள்ளன. ஆனாலும் கிண்டி,  வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து மென்பொருள் பூங்காவுக்கு வரும் வாகனங்கள் சித்தாலப்பாக்கம், காரணை, தாழம்பூர் வழியாக சிறுசேரி மற்றும் புதுப்பாக்கம் வரை செல்லும் மற்றொரு பிரதான சாலையை  பயன்படுத்துகின்றன.

அதிக வாகன போக்குவரத்தால், இச்சாலையின் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பைக், கார், வேன் ஆகிய வாகனங்களில் பயணிப்பது, மலைப்பாதையில் செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்குவதாக  பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இச்சாலையில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள், இந்த மோசமான சாலையால் கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இதுபற்றி சிறுசேரி ஊராட்சி மன்றம் சார்பில் பலமுறை நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனுக்கள் அனுப்பியும், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சிறுசேரி - மேடவாக்கம் இடையே உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலையை சீரமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kucheri - Medavakkam Road ,dumping pit ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...