×

மார்க்கெட் அமைக்காததால் மழையில் நனைந்து கொண்டு வியாபாரம் செய்கிறோம்

மண்டபம், நவ.12:  மண்டபம் முகாம் பகுதியில் மார்க்கெட் அமைத்து தர ேவண்டும் என்று வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மண்டபம் முகாம் பகுதியில் பல ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்டவர்கள் சாலை ஓரங்களில் மீன்கள்,பழம் காய்கள் போன்ற பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு கடைக்கு தினந்தோறும் 5 ரூபாய் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சாலை ஓர வியாபாரிகள் மண்டபம் முகாம் பகுதியில் மார்க்கெட் அமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம், மார்க்கெட் அமைத்து தருவதாக கூறி பல ஆண்டுகளாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதனால் மண்டபம் முகாம் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து கொண்டு வியாபாரம் செய்யும் அவல நிலையுள்ளது. இதனால் விரைவில் மண்டபம் முகாம் பகுதியில் சாலை ஓர வியபாரிகளுக்கு மார்க்கெட் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பழம், மீன் வியாபாரம் செய்யும் லெட்சுமி, வீரசின்னமா கூறியதாவது, மண்டபம் முகாம் பகுதியில் நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழ வியாபாரம் மற்றும் மீன் வியாபாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு மார்க்கெட் அமைத்து தரவேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் மார்க்கெட் அமைத்து தர நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தினந்தோறும் ரூ.5 பேரூராட்சி நிர்வாகம் வசூல் செய்து கொள்கின்றனர். மேலும் நாங்கள் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து கொண்டு வயிற்று பிழைப்பிற்காக வியாபாரம் செய்வதாக தெரிவித்தனர்.

Tags :
× RELATED போதிய அளவில் வெங்காயம் இருப்பு...