×

தொடர் கொலைகளால் பீதியில் மக்கள்

சிவகங்கை, நவ.12: சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் கொலைகளால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டில் 35 கொலைகள் நடந்தன. 2016ம் ஆண்டில் 32 கொலைகள் நடந்துள்ளன. 2017ம் ஆண்டில் 33 கொலைகள், 2018ம் ஆண்டில் 33 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு பிப்.28 சிவகங்கை முந்திரிகாட்டில் மதுரையை சேர்ந்த காளிதாஸ் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஏப்.10ல் சிவகங்கையை சேர்ந்த பார்மசிஸ்ட் தமிழ்செல்வன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளே படுகொலை செய்யப்பட்டார். மே 10ல் சிவகங்கை சி.பி காலனியை சேர்ந்த கண்ணன் இலந்தங்குடிப்பட்டி கண்மாயில் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். மே 10ல் மானாமதுரை அருகே வாகுடியில் அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவர் நடுரோட்டில் எரித்து படுகொலை செய்யப்பட்டார். மே 21ல் இளையான்குடி அருகே பகைவரைவென்றான் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்(26) தாயமங்கலம் குளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மே 22ல் மானாமதுரை அருகே மேலப்பிடாவூரை சேர்ந்த புவனேஸ்வரன்(எ)ஈஸ்வரன், போலீஸ் ஸ்டேசனில் ஜாமீன் கையெழுத்திட்டு வரும்போது சிவகங்கை அருகே மறக்குளத்தில் படுகொலை செய்யப்பட்டார். மே 26ல் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். செப்.3ல் சிவகங்கை அருகே காராம்போடை கிராமத்தில் மதுரை, கே.புதூரை சேர்ந்த முத்துக்குமார்(45) கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். செப்.7ல் சிவகங்கையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த ராஜசேகரன்(38) கலெக்டர் அலுவலகம் அருகே ஓடஓட விரட்டி படுகெலை செய்யப்பட்டார். செப்.18ல் மானாமதுரை அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க தங்கமணி மற்றும் கணேஷ்நாத் ஆகிய இருவரையும் விரட்டி வந்து வங்கிக்குள் வைத்து ஒரு கும்பல் வெட்டியது. இதை தடுக்க வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் கும்பலை சேர்ந்த தமிழ்செல்வத்திற்கு காலில் குண்டு பாய்ந்தது. செப்.19ல் தேவகோட்டையில் சிவமணி அய்யப்பன் வெட்டி கொலை செய்யப்பட்டார். நவ.8 அன்று காரைக்குடியில் பஞ்சவர்ணம்(32) ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.

நவ.9 அன்று ஒக்கூரில் நகை, பணத்திற்காக மூதாட்டி மீனாட்சி கொலை செய்யப்பட்டு செய்து அவரது கணவர் தாக்கப்பட்டார். தொடர்ந்து கொலைகள் நடந்து வருவது சிவகங்கை மாவட்ட மக்களை அச்சமடைய செய்துள்ளது. கொலைகளை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கொலை, கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் விரட்டி, விரட்டி கொலை செய்வது, வீடுகளில் தனியாக இருக்கும் முதியோரை தாக்கி கொள்ளையடிப்பது, கொலை செய்வது அதிகரித்துள்ளது. இதனால் கடும் அச்சமாக உள்ளது. கொலை சம்பவங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : killings ,
× RELATED 2021-ல் நாட்டில் தினசரி சராசரியாக 82...