×

‘பயோ மைனிங்’ முறையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அகற்றம்

நாகர்கோவில், நவ. 12:  வலம்புரிவிளை குப்பை கிடங்கு குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள 52 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 110 டன் குப்பைகள் மாநகர பகுதியில் சேகரிக்கப்படுவதால், வலம்புரிவிளை உரக்கிடங்கு மலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் தேங்கும் குப்பைகள் அனைத்தையும் மாற்றுவதற்கு மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு, உரமாக்கும் திட்டத்திற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் 11 இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநகராட்சி முடிவு செய்து, அதற்கான பணி நடந்து வருகிறது.  வலம்புரிவிளை, புளியடி உள்பட 6 இடங்களில் பணிகள் முடிந்துள்ளது. 5 இடங்களில் இந்த பணி நடக்கவுள்ளது. சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தேங்கும் குப்பைகளை சேகரிக்க 3 லாரிகள், மற்றும் 4 டம்பர் பிளேசர் வண்டிகள் இயங்கி வருகின்றன. நுண்ணுயிர் உரக்கிடங்கு திட்டத்தை தொடர்ந்து நாகர்கோவில் மாநகரில் முக்கியமான பகுதியில் குப்பைகள் போடவைக்கப்பட்டிருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட ‘டம்பர் பின்’கள் அகற்றப்பட்டுள்ளது.

 மேலும் மாநகர பகுதியில் குவியும் குப்பைகள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக நாகர்கோவில் மாநகராட்சியில் பேட்டரி ஆட்டோ, டிரைசைக்கிள், தள்ளுவண்டிகள் உள்ளன. இதனை கொண்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி வருகின்றனர். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றினாலும், ஒரு சில இடங்களில் குப்பைகள் அதிக அளவு தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் பலத்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் வலம்புரிவிளை உரக்கிடங்கை பயோமைனிங் முறையில் மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து குப்பைகள் அகற்றுவதற்கான டெண்டர் விடப்பட்டது. இதனை ஒரு தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. இதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. உரக்கிடங்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளை இன்னும் சில நாட்களில் மாற்றும் வேலையில் அந்த நிறுவனம் ஈடுபடவுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. 5 மையங்களில் இந்த உரக்கிடங்கு இயங்கிவருகிறது. இதனால் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு வரவில்லை.

மற்ற பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு வருகிறது. தற்போது இந்த உரக்கிடங்கில் 1 லட்சத்து 53 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. நாகர்கோவில் நகர பகுதியில் வலம்புரிவிளை உரக்கிடங்கு இருப்பதால் பலதரப்பினர் மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக உரக்கிடங்கை பயோ மைனிங் முறையில் அனைத்து குப்பைகளையும் தரம் பிரித்து அகற்றி, அந்த இடத்தில் குப்பை இல்லாத தனி மைதானமாக தரவேண்டும். இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒரு தனியார் நிறுவனம் இதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.9 கோடியே 77 லட்சத்து 67 ஆயிரத்திற்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை ஒரு வருடகாலத்திற்குள் முடிக்கவேண்டும் என்றார்.


Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி