×

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உடைந்து சிதைந்த டைல்ஸ் நடைபாதை சீரமைப்பு

திருவண்ணாமலை, நவ.12:  திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உடைந்து சிதைந்திருந்த டைல்ஸ் நடைபாதையை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை தரத்தை மேம்படுத்தி, பாதையை விரிவுபடுத்தும் திட்டம் ₹65 கோடியில் நடந்து வருகிறது. அதையொட்டி, கிரிவலப்பாதையின் வலதுபுறம் 2 மீட்டர், இடதுபுறம் 5 மீட்டர் தூரம் அகலப்படுத்தி, அதில் டைல்ஸ் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிரிவலப்பாதை விரிவாக்கப் பணி முழுமையாகவும், தரமாகவும் நடைபெறவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். குறிப்பாக, கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதம் புண்படாமல் இருக்கவும், வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும் பவுர்ணமி அல்லாத நாட்களில், பாதையோரம் பாதுகாப்பாக பக்தர்கள் செல்லவும் டைல்ஸ் நடைபாதை  அமைக்கப்பட்டது. ஆனால், பாதையின் பல்வேறு இடங்களில் உடைந்தும், சிதைந்தும் உருகுலைந்தும் காணப்படுகிறது. இந்த பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். டைல்ஸ் நடைபாதை அமைத்து ஓராண்டு முழுமையாக முடியும் முன்பே உருகுலைந்த அவலம் குறித்து, தினகரன் நாளிதழில் கடந்த 9ம் தேதி செய்தி வெளியானது.

அதைத்தொடர்ந்து, பவுர்ணமி கிரிவல தினமான நேற்று அவசர கோலத்தில் டைல்ஸ் நடைபாதையை சீரமைக்கும் பணி நடந்தது. செய்தியில் சுட்டிக்காட்டப்பட்ட இடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவசர அவசரமாக சீரமைத்தனர். இந்த பணியும் அலங்கோலமாக நடந்ததால், அடுத்த சில நாட்களில் அவையும் பெயர்ந்துவிடும் ஆபத்து உள்ளது. கிரிவலப்பாதையின் அபய மண்டபம் தொடங்கி, அண்ணா நுழைவு வாயில் வரை எண்ணற்ற இடங்களில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்துள்ளன. ஒருசில இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, இந்த குறைபாடுகளை முழுமையாக சீரமைத்தால் மட்டுமே, பக்தர்கள் இந்த பாதையை முழுைமயாக பயன்படுத்த முடியும்.
எனவே, சிதைந்திருக்கும் டைல்ஸ் பாதையை முறையாகவும், முழுமையாகவும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : tiles corridor ,Kirivalapathi ,
× RELATED திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்...