×

மின்னாம்பள்ளி சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்

அயோத்தியாப்பட்டணம், நவ.12:  மின்னாம்பள்ளி சந்தையில் மாடுகள் விற்பனை சூடுபிடித்தது. இதன் மூலம் நேற்று ஒரேநாளில் ₹2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளியில் நேற்று வாரச்சந்தை கூடியது. இதில், சேலம் மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களான நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதேபோல், ஈரோடு மற்றும் நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வர்த்தகர்கள் மாடு வாங்குவதற்காக வந்து குவிந்தனர். சந்தையில் வழக்கமாக மாடுகள் ₹15,000 முதல் ₹60,000 வரையிலும் விற்பனை செய்யப்படும்.  பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, மாடுகளை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். இதனால், விலை அதிகரித்தது. ஜோடி மாடுகள் ₹1 லட்சம் வரை விலைபோனது. ஆக மொத்தம் நேற்று ஒரேநாளில் சுமார் ₹2 கோடிக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தையில் மாடுகளை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் பல்வேறு இடங்களிலிருந்து வாகனங்களில் வந்து வியாபாரிகள் குவிந்ததால் மின்னாம்பள்ளி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்