×

உயர்மின் கோபுரங்கள், எரிவாயு குழாய்கள் அமைப்பதால் விளை நிலங்களை அடமானம் வைக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

திருப்பூர், நவ.12: உயர் மின் கோபுரங்கள், இயற்கை எரிவாயு குழாய்கள்அமைத்து  விளைநிலங்களை மதிப்பு இழக்கச்செய்யும் செயல்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுவதால் விவசாயிகள் தங்கள் நிலங்களை அடமானம் வைத்து கடன் வாங்க முடியாத அவல நிலையில் தவித்து வருகின்றனர். மாநில, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குழாய் பதித்து கொண்டுசெல்ல வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள  விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள், கெயில் இயற்கை எரிவாயு குழாய்கள், காற்றாலைகள், டெல்டா மாவட்டங்களில் ஹெட்ரோ கார்பன் திட்டம்  ஆகியவற்றை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது. ஒரு காற்றாலை அமைக்க குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் முதல் அதிக படசம் 3 ஏக்கர் வரை தேவைப்படுகிறது. தற்போது அமைக்கும் காற்றாலைகள் 7,500 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 80 மீட்டர் உயரத்தில் கோபுரம் அமைக்கப்படுகிறது. காற்றாலைகளிலிருந்து வெளிவரும் சத்தம் கால்நடைகளுக்கு கூட இடையூறுகளை ஏற்படுத்துகிறது.

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அவசர தவைக்காக தங்களுடைய விளைநிலங்களை காற்றாலை அமைக்க இடத்தை கொடுத்தது தற்போது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளில் கல்விச்செலவு, மகள்களுக்கு திருமணச்செலவுக்கு தங்களுடைய இடங்களை விற்பனை செய்து அந்த தொகையை கொண்டு செலவிட்டனர். தற்போது காற்றாலைகள் அமைத்தும், உயர் மின் கோபுரங்கள் செல்வதால் இடத்தை வாங்க யாரும் முன் வருவதில்லை. இதனால், சொல்ல முடியாத துயரத்தில் விவசாயகள் உள்ளனர்.  தமிழகத்தில் விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள், கெயில் இயற்கை எரிவாயு குழாய்கள், காற்றாலை  ஆகியவற்றை அமைத்து விவசாய விளைநிலங்களை மதிப்பிழக்கச்செய்யும் செயல்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுவதால் தங்கள் நிலங்களை அடமானம் வைத்து கடன் வாங்க முடியாத அவல நிலையில் தவித்து வருகின்றனர். விவசாயிகளை பாதிக்காதவாறு உயர் மின் கோபுரங்களுக்கு பதிலாக கேபிள் அமைக்கவும், குழாய்கள் பதிக்க மாநில, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில்  கொண்டுசெல்ல வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் எதிரொலிக்குமென அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது.  உயர் மின் கோபுரங்கள், கெயில் குழாய்கள் இவை விவசாய விளைநிலங்களில் அமைக்கப்படுவதால் சுகாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியான பாதிப்பையும் மக்கள் எதிர்கொள்கின்றனர். உயர் மின் அழுத்தக் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகள் மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கிறது. புற்றுநோய், கருச்சிதைவு போன்ற அபாயகரமான நோய்களுக்கு மக்கள் ஆளாகுகின்றனர். மேலும், ஆடு, மாடு போன்ற விலங்கினங்களும், தென்னை போன்ற பயன்தரும் மரங்களும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பிரதமர் மோடி கொச்சியில் இருந்து 3,600 கி.மீ. தூரத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு கடலுக்கு அடியே மின்சாரம் கொண்டு போவேன் என்கிறார். மேலும், தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுக்கும் இந்திய அரசு மின்சாரம் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும் பூமிக்கு அடியில்  மின்சாரம் கொண்டு செல்லப்பட வேண்டும். கெயில் திட்டம் விவசாயிகளின் விளைநிலங்களைப் அழிக்கப் பார்க்கிறது. விவசாய விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள், கெயில்குழாய்கள் செல்லாமல் மாநில, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் மூலம் மின்சாயத்தையும், குழாய்கள் பதிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்க வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : land ,towers ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...