×

பாலகொலாவில் படுகரின மக்கள் கொண்டாடிய ‘சூஞ்சு’ பாரம்பரிய பண்டிகை

மஞ்சூர், நவ.12:  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பாலகொலா. இப்பகுதியில் வசிக்கும் படுகரின மக்களின் பாரம்பரிய ‘சூஞ்சு’ பண்டிகையை நேற்று கொண்டாடினர்.  இந்த  பண்டிகையையொட்டி மேற்குநாடு சீமைக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பாலகொலாவில் உள்ள பெந்தொரை அணை என்ற இடத்தில் ஒன்று கூடினர். இதை தொடர்ந்து கிராம தலைவர்கள் முன்னிலையில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் பழமை வாய்ந்த தங்க குண்டுமணிகள் மற்றும் வெள்ளி முத்திரைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.  இதை தொடர்ந்து, அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கொடிய நோய்கள் தாக்காமல் இருக்கவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும் வேண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த பண்டிகை குறித்த சுவாரசிய தகவல் வருமாறு, சுமார் 300ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வரி வசூலிக்க அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் சிக்கண்ணதுரை.

இவர் தூதூரில் வசித்த பாலசெவணன் என்பவருக்கு மணியக்காரர் பட்டம் கொடுத்து பொதுமக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் உரிமையை வழங்கி அடையாள சின்னமாக ஒரு வெள்ளி முத்திரையை வழங்கினார். மேலும் மேலூரில் பொதுவான சிவன் கோயில் அமைத்து பூசாரிகளுக்கு உதவி செய்வதற்காக ஒருவரை நியமித்து 3 தங்க குண்டுமணிகள் கொடுத்து அவருக்கு சின்னகானி கவுடர் என்ற பட்டம் சூட்டப்பட்டது.  இதை நினைவுகூறும் வகையில்,  ஆண்டுக்கொருமுறை பாலகொலாவில் தங்ககுண்டுமணிகள் மற்றும் வெள்ளி முத்திரையை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து பாரம்பரிய சம்பிரதாயங்களுடன் சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர். மேலும் இந்த பண்டிகையின்போது காணிக்கை செலுத்துவது பூமிக்கு செலுத்தும் பொது பசலி (கந்தாயம்) என கூறப்படுகிறது. இந்த பண்டிகையை ‘சூஞ்சுஹப்பா’ என்று குறிப்பிடுகின்றனர். விழாவைெயாட்டி அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags : Sunju ,Palakola ,
× RELATED மைனலை மட்டம் -கிட்டட்டி சாலை சீரமைக்கும் பணி துவக்கம்: மக்கள் மகிழ்ச்சி