×

இடிந்து விழும் நிலையில் அம்பேத்கர் மாணவர் விடுதி

கோவை, நவ. 12:  கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான அம்பேத்கர் மாணவர் விடுதி இடியும் நிலையில் இருக்கிறது.  கோவை பாலசுந்தரம் ரோட்டில் அம்பேத்கர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதி கடந்த 1975ம் ஆண்டு கட்டப்பட்டது. தரைத்தளத்துடன் கூடிய இரண்டு மாடி கட்டடம். இதில், 36 அறைகள் உள்ளன. இந்த விடுதியில் கோவை அரசு கல்லூரிகளில் படித்து வரும் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் 170 பேர் தங்கி படித்து வருகின்றனர்.  இந்த மாணவர் விடுதி கட்டடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. மிகவும் ேசதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஆதிதிாரவிட நலத்துறை இயக்குனர் மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் விடுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.   இதை தொடர்ந்து, கோவை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்கள் விடுதிகளை ஆய்வு செய்தது போல அறிக்கையை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
 இந்த விடுதி வளாகத்தில் சுகாதார சீர்கேடு காரணமாக தூர்நாற்றம் வீசுகிறது.

விடுதியின் கட்டடம் பல இடங்களில் விரிசல் விட்டுள்ளது. சில பகுதிகள் இடிந்துள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கட்டடம் பராமரிப்பு பணியை ரூ.35 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் தாட்கோ இன்ஜினிரியர்கள் கட்டிடத்தினை ஆய்வு செய்தனர். அப்போது, கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருக்கிறது எனவும், இதை இடித்து புதிதாக கட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என தெரிகிறது.

Tags : Ambedkar ,student hostel ,ruins ,
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...