×

மாவட்டத்தில் 750 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க திட்டம்

கோவை, நவ. 12:  கோவை மாவட்டத்தில் 750க்கும் மேற்பட்ட பகுதிகளில் புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  கோவையில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலுள்ள வீடுகள், அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள், தனியார் நிறுவனங்களின் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தவறாமல் அனைவரும் அமைத்திடல் வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அனைத்து வீடுகளிலும் உள்ளதா என்பதையும், கட்டமைப்புகள் செயல்பாட்டு நிலையில் உள்ளதா என்பதையும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இக்கட்டமைப்புகள் இல்லாத கட்டிடங்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். மேலும் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, மத்தியம், தெற்கு, வடக்கு ஐந்து மண்டலங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பலகைகள் வைத்திட அனைத்து மண்டல உதவி ஆணையர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் பல பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு அது செயல்படாமல் உள்ளது.

சில இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படாமல் உள்ளது. இது போன்று மாநகாராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் மற்றும் சீரமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகிறது. இதனிடையே, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளும், மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளும் என மொத்தம் 750க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க மாவட்டம் முழுவதும் 750 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல இடங்களில் ஆய்வுகள் முடிந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழைநீர் வீணாகாமல் பூமிக்குள் சென்றடையும், நிலத்தடி நீர்மட்டம் உயரும்,’’ என்றனர்.

Tags : places ,district ,
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!