×

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு மாத்திரை தட்டுப்பாடு

காஞ்சிபுரம், நவ.12: காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு உரிய மாத்திரை வழங்காததால், அங்குள்ள செவிலியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்,பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சர்க்கரை நோயாளிகள் மாதந்தோறும் அதற்குரிய மாத்திரைகளை பெற்று செல்கின்றனர். வெளி மார்க்கெட்டில் வாங்கினால் சுமார் ₹600 மதிப்புள்ள மாத்திரைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனால், 80 சதவீதம் சர்க்கரை நோயாளிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாத்திரை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த மாதத்துக்கான மருந்து வாங்குவதற்கு செவிலிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேற்று காலை ஏராளமான நோயாளிகன் வந்தனர். அவர்களுக்கு மாத்திரை இல்லை என்று மருத்துவமனை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள், அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை ஊழியர்கள் 30 மாத்திரைகள் தருவதற்கு பதிலாக 10 மாத்திரைகள் மட்டுமே கொடுத்து அனுப்பினர். இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் கேட்டபோது, மாதம் ஒரு லட்சம் மாத்திரைகள் வரவேண்டிய இடத்தில் தற்போது வெறும் 10 ஆயிரம் மாத்திரைகள் மட்டுமே வந்துள்ளன.  இதனால், முறையாக மாத்திரைகள் வழங்க முடியவில்லை. இன்னும் சில நாட்களில் இது சரியாகிவிடும் என்றனர்

Tags : sugar patients ,Government Primary Health Center ,
× RELATED சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு