×

கட்டுமான நிறுவன சூபர்வைசர் கொலை அசிங்கமாக பேசியதால் அடித்து கொன்றேன்

மாமல்லபுரம், நவ.12: மாமல்லபுரம் அருகே கட்டுமான சூபர்வைசர் கொலை வழக்கில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். அசிங்கமாக பேசியதால் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக, போலீசார் தெரிவித்தனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (53). தனியார் கட்டுமான  நிறுவன சூபர்வைசர். கடந்த 6 ந் தேதி இரவு மஞ்சுநாதன், மாமல்லபுரம் அருகே அருங்குன்றம் பகுதியில் கொலை செய்யப்பட்டு, சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். விசாரணையில், சம்பவத்தன்று, மஞ்சுநாதன், தனது நண்பர் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்த அண்ணாமலை (47) என்பவருடன் மது அருந்தினார் என தெரிந்தது. இதையடுத்து போலீசார், அண்ணாமலையை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் பேசினார். இதனால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

அதில், அண்ணாமலை சாலைப்போடும் பணியில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் மஞ்சுநாதன், புதுப்பட்டினத்தில் காயில் கட்டும் கடை வைத்திருந்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நட்பு தொடர்ந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று, மாமல்லபுரம் அடுத்த அருங்குன்றம் பகுதியில் 2 பேரும் மது அருந்தினர். அப்போது, போதை ஏறவில்லை என கூறி, மீண்டும் திருக்கழுக்குன்றம் டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில் வாங்கினர்.இதையடுத்து, மதுபாட்டிலை எடுத்து கொண்டு புலியூர் பகுதிக்கு சென்று, அங்கு உட்கார்ந்து சாவகாசமாக குடித்தனர். பின்னர், எச்சூர் ஐயப்பன் கோயில் அருகே சென்று கஞ்சா அடித்து விட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அதில் மஞ்சுநாதன், அண்ணமலையை அசிங்கமாக பேசியுள்ளார்.

 இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, மஞ்சுநாதனின் பைக்கில் இருந்த இரும்பு ராடை எடுத்து மஞ்சுநாதன் தலையில் அடித்தார். இதில், மஞ்சுநாதன் ரத்த வெள்ளத்தில் துடித்தார்.இதை பார்த்ததும், அவர் இரும்பு ராடை அருகில் இருந்த ஏரியில் வீசிவிட்டு தப்பிவிட்டார் என  வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags : death ,construction company ,supervisor ,
× RELATED கடும் குளிரால் முதியவர் சாவு