×

3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட வாலிபர் மீண்டும் சிறையில் அடைப்பு

திருப்போரூர், நவ.12: தாம்பரம் அருகே துப்பாக்கியால் சுட்டு மாணவன் கொலை செய்த சம்பவத்தில், போலீஸ் காவல் விசாரணை முடிந்து, வாலிபரை மீண்டும் சிறையில் அடைத்தனர். தாம்பரம் அருகே வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஷோபனா என்பவரது மகன் முகேஷ்குமார் (19). பாலிடெக்னிக் கல்லூரி மாணவன். கடந்த 4ம் தேதி முகேஷ்குமார், நண்பன் விஜய் என்பவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த விஜய்யை, தாழம்பூர் போலீசார், போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக விசாரித்தனர். இந்த விசாரணையில் விஜய்யின் உறவினரும் அதிமுகவை சேர்ந்த வேங்கடமங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவருமான ரவிக்கு கொலை மிரட்டல் இருந்து வந்தது. இதையடுத்து அவர் பெருமாட்டு நல்லூரை சேர்ந்த செல்வம் என்ற ரவுடி கும்பலை தனக்கு பாதுகாப்பாக வைத்து கொண்டார். இந்த கும்பலின் தலைவன் செல்வத்துடன் விஜய்யும் இருந்துள்ளார்.

இதில் செல்வம் கொடுத்ததாக கூறி துப்பாக்கி ஒன்றை விஜய் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னுடன் சேர்ந்து ரவுடி கும்பலுடன் செயல்பட்டால் இதுபோன்ற பல விஷயங்களை தைரியமாக செய்யலாம் என முகேஷ்குமாரிடம் ஆசை காட்டியுள்ளார்.
இதைதொடர்ந்து, சம்பவத்தன்று தனது வீட்டுக்கு வந்த முகேஷிடம், துப்பாக்கியை காட்டி தன்னுடன் வந்து செல்வம் குரூப்பில் சேருமாறு விஜய் கூறியுள்ளார். மேலும், சினிமாவில் வருவதுபோல் துப்பாக்கியை முகேஷின் நெற்றிப்பொட்டில் வைத்து சுடுவதுபோல் முயற்சி செய்தபோது, குண்டு வெளியேறி முகேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை விஜய் கொடுத்த தகவலின்படி நல்லம்பாக்கம் குவாரியில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

இந்நிலையில் நேற்றுடன் நீதிமன்றம் அளித்த 3 நாள் போலீஸ் காவல் முடிந்தது. இதையடுத்து விஜய்யை, போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது விஜய்யிடம், நீதிபதி காயத்ரிதேவி போலீசார் உன்னை தாக்கினார்களாக, சரியாக உணவு கொடுத்தார்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய், போலீசார் தன்னை தாக்கவில்லை என்றும், உணவு கொடுத்தார்கள் என்றும் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பழனியிடம் நீதிபதி, உங்களுக்கு தேவையான தகவல்களை பெற்று விட்டீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இன்ஸ்பெக்டர், அனைத்து உண்மை தகவல்களையும் போலீசாருக்கு விஜய் கூறிவிட்டதாகவும், அவர் கொடுத்த தகவலின்படி துப்பாக்கியை கைப்பற்றியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வரும் 20ம் தேதி வரை விஜய்யை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

போலீசாருக்கு நீதிபதி கண்டனம்
 இந்த வழக்கு நடந்தபோது நீதிமன்றத்துக்கு வந்த தாழம்பூர் இன்ஸ்பெக்டர் பழனியிடம், நீதிபதி காயத்ரிதேவி, ரொம்பவும் முக்கியமான வழக்குகள் என்றால் மட்டும் இன்ஸ்பெக்டரே நேரில் வந்து ஆஜராகி கவனமாக பார்த்து கொள்கிறீர்கள். ஆனால், உங்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளை நீங்கள் கண்டு கொள்வதே இல்லை. நீதிமன்ற பணிகளை கவனிக்கும் போலீசாரும் கோர்ட்டுக்கு முறையாக வருவதில்லை. சம்மன்களை உரிய நபரிடம் கொடுத்து வழக்கை முறையாக நடத்துவதில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளன. இந்த நிலை நீடித்தால் உயர்நீதிமன்றத்துக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும் என கண்டிப்புடன் கூறினார். அதற்கு பதிலளித்த இன்ஸ்பெக்டர், இனி அதுபோல் நடக்காது. அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க ஒத்துழைப்போம் என உறுதியத்தார்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...