×

9 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பால பணிபாமகவினர் மனித சங்கிலி போராட்டம்

செங்கல்பட்டு, நவ.12: சிங்கப்பொருள் கோயில் பகுதியில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணியை துவக்க வலியுறுத்தி பாமக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. செங்கல்பட்டு  அடுத்த சிங்கபெருமாள் கோயிலில் இருந்து ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையின்  இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி  கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால்,  பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைகின்றனர்.இதுதொடர்பாக கடந்த ஆண்டு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து, தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலை துறை, உடனடியாக பணியை துவங்கி விரைவில் மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணியை மீண்டும் துவக்க வலியுறுத்தி, பாமக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று சிங்க பெருமாள்கோயில் தேசிய நெடுஞ்சாலை அருகே  நடந்தது.பாமக துணைப் பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம், நகர செயலாளர் சரவணன், தொகுதி அமைப்பு செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், திருக்கச்சூர் ஆறுமுகம், செய்தியாளர்களிடம் கூறுகையில், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட 9 ஆண்டுகளுக்கு முன் வேலை தொடங்கப்பட்டது. இதுவரை பணி முடிக்கவில்லை. இதனால், தினமும் ரயில்வே கேட்டை கடந்து ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சிப்காட் உள்பட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு உதிரிபாகங்கள் மற்றும் ஊழியர்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு பைக்கில் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, ரயில்வே துறை, நெடுஞ்சாலை துறை  உடனடியாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணியை துவங்கி, விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  மாவட்டம் தழுவிய மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார்.

Tags : railway superintendents ,warehouse ,
× RELATED சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 9.6 டன்...