×

சென்னீர்குப்பம் அருகே கூவத்தில் மருத்துவக்கழிவு கொட்ட எதிர்ப்பு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

பூந்தமல்லி, நவ.12 : பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றில் இரவு நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து எடுத்து வரும் கழிவுகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், அந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் கோரிக்கை வைத்தனர். பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக்குப்பத்திற்கும் திருவேற்காட்டிற்கும் இடையே கூவம் ஆறு ஓடுகிறது. இந்தப்பகுதியில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் சேரும் கழிவுகள், குப்பைகளை இரவு நேரங்களில் எடுத்து வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் கூவம் ஆற்றங்கரை மற்றும் ஆற்றுப்பகுதியில் குப்பைகள் தேங்கி  துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்று நீரும், நிலத்தடி நீரும் மாசு படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், உரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து அந்தப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு திருவேற்காடு - பள்ளிக்குப்பம் சாலையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். அதன் மூலம் இரவு நேரத்தில் வாகனங்களில் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பை எடுத்து வந்து கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி கழிவு பொருட்கள் மற்றும் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்தப் பிரச்னை குறித்து பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி  கூறியதாவது:  சென்னீர்குப்பம் பகுதி கூவம் கரையோரம் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பகுதியில் குப்பை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். இதற்காக அங்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும். மேலும் காவலாளி ஒருவரும் நியமிக்கப்படுவார். இதையும் மீறி அப்பகுதியில் குப்பை கொட்டுபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : demonstration ,campaign ,Chennirguppam ,Kovam ,
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...