×

லோன் வாங்கி தருவதாக மூதாட்டியிடம் நகை, பணம் அபேஸ்

ஊத்துக்கோட்டை, நவ.12: பெரியபாளையம் அருகே வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி  மூதாட்டியிடம் முக்கால் சவரன் கம்மல், ₹1000 ரொக்க பணத்தை ஏமாற்றியவரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.  பெரியபாளையம் அருகே எர்ணாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி - ரோசம்மாள் தம்பதிகள். இவர்கள் மண்பாண்டம் செய்யும்  கூலித்தொழிலாளர்கள். பானை, சட்டி செய்து அதை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் டிப்டாப் ஆசாமி ஒருவர், ரோசம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார். நீங்கள் பானை சட்டி செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள்  தானே என கேட்டுள்ளார். பின்னர், உங்களுக்கு வங்கியில் ரூ. ஒரு லட்சம் லோன் வந்துள்ளது.  அந்த பணத்தை பெறவேண்டுமானால் ₹4750  செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.  இதை கேட்ட மூதாட்டி, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ₹1000 மட்டுமே உள்ளது  என்றார். உடனே அந்த மர்ம நபர், நகை ஏதாவது இருந்தால் கொண்டு வாருங்கள். அதை அடகு வைத்து வங்கியில் கட்ட தேவையான பணத்தை எடுக்கலாம். பின்னர், லோன் வந்தவுடன் நகையை மீட்டுவிடலாம் என கூறியுள்ளார்.  

உடனே மூதாட்டி என்னிடம் முக்கால் சவரன்  கம்மல் மட்டுமே உள்ளது என்றார். இதை கேட்ட மர்ம நபர், என்னுடன் பைக்கில் வாருங்கள். வங்கிக்கு சென்று ₹4750 செலுத்தி விட்டு ஒரு லட்சம் பணத்தை வாங்கி வரலாம் என்று கூறி மூதாட்டியை பைக்கில் அழைத்து சென்றார். அணைக்கட்டு பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு, வங்கி அதிகாரிகள் இங்கேயே வருகிறார்கள். நீ இந்த கோயில் வாசலில் அமர்ந்திரு.  நான் சென்று நகையை அடகு வைத்து பணம்  வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு நகையை மூதாட்டியிடம் வாங்கிக்கொண்டு அவர் சென்றார்.  அங்குள்ள கோயில் வாசலில் நீண்ட நேரம் அமர்ந்திருந்த மூதாட்டி,  நகை வாங்கி சென்ற மர்ம நபர் வராததால் சந்தேகம் அடைந்தார்.  என்னுடைய பணத்தையும், நகையையும் யாரோ ஒருவன் வாங்கிச்சென்று விட்டானே என கூறி அழுதுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை  அருகில் உள்ள வெங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
 புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து   விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பட்டப்பகலில் துணிகரம் இரண்டு வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை