×

மனைவியுடன் தகராறு காரணமாக மின் கோபுரத்தின் மீது ஏறி கணவன் தற்கொலை முயற்சி

சென்னை: போரூர் ஏரி பகுதியில் உள்ள உயரழுத்த மின் கோபுரத்தின் மீது வாலிபர் ஒருவர் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக, போரூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த வாலிபரை கீழே இறங்கும்படி தெரிவித்தனர். ஆனால், அவர் மது போதையில் இருந்ததால் கீழே இறங்க மறுத்து விட்டார். இதையடுத்து, நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் டார்வின், தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் நைசாக பேச்சு கொடுத்தபடி மின் கோபுரத்தின் மீது ஏறி, அவரிடம் நீண்ட நேரமாக பேசி, அவரது மனதை மாற்றி கீழே இறங்க வைத்தார். விசாரணையில் போரூர் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லபாண்டி (32) என்பதும், வெல்டிங் வேலை செய்து வருவதும் தெரிந்தது.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி, நேற்று காலை மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த செல்லபாண்டி மது அருந்திவிட்டு, உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதையடுத்து அந்த வாலிபருக்கு அறிவுரை கூறி, அவரது மனைவியுடன் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags : suicide ,power tower ,
× RELATED திருமணமான ஒரு மாதத்தில் மனைவி சாவு:...