×

வாங்கிய சில நாட்களிலேயே கோளாறு பிரிட்ஜ் நிறுவனத்துக்கு ரூ15 ஆயிரம் அபராதம்

சென்னை: வாங்கிய சில நாட்களிலேயே பிரிட்ஜ் பழுதானதால், சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர், கடந்த 2012ம் ஆண்டு, பிரபல எலக்ட்ரானிக் கடையில் ரூ.12,400 கொடுத்து, முன்னணி நிறுவனத்தின் குளிர்சாதன பெட்டி (பிரிட்ஜ்) வாங்கியுள்ளார். இந்த பிரிட்ஜ் வாங்கிய சில நாட்களிலேயே குளிர்ச்சி ஆகாமல் பழுதானது. இதனை தொடர்ந்து சுப்பிரமணியம், அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரை தொடர்புகொண்டு புகார் அளித்தார். அதன்படி, சர்வீஸ் சென்டர் ஊழியர், இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால், அவர் சர்வீஸ் பார்த்ததாக கூறி கையெழுத்து பெற்று சென்றுள்ளார். பின்னர் மீண்டும் சுப்பிரமணியம் புகார் அளித்துள்ளார். ஆனால், பிரிட்ஜை சரி செய்வது குறித்து யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுப்பிரமணியம், சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி மற்றும் உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் பிரிட்ஜ் வாங்கி, சில நாட்களிலேயே பழுதடைந்தது, தெரியவந்துள்ளது. மேலும் அதனை சரிசெய்து கொடுக்க நிறுவனமும் தவறியுள்ளது. எனவே, மனுதாரரின் பிரிட்ஜை பெற்றுக்கொண்டு புதிய ப்ரிட்ஜை மாற்றி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதன் விலை ரூ.12,400 திருப்பி வழங்க வேண்டும். மேலும். மன உளைச்சலுக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Tags : purchase ,Dispute Bridge ,
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு