×

பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு கூடுதலாக 100 கன அடி நீர் திறப்பு

சென்னை: பூண்டி ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நேற்று முதல் கூடுதலாக 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த மாதம் 6ம் தேதி வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 11ம் தேதி லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணா நீர்வரத்துடன், அம்மம்பள்ளி அணையில் இருந்தும் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்தது.

இதையடுத்து, ஒன்றாம் தேதி பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், சிறுகடல் அருகே உள்ள தடுப்பணையில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 430 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடியும் பிரித்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில், பூண்டி ஏரியில் இருந்து நேற்று காலை புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பூண்டி ஏரியின் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், நேற்றைய நிலவரப்படி 1,489 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

ஆபத்தான குளியல்: பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் லிங்க் கால்வாயில் பொதுமக்கள், சிறுவர்கள் குளிக்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில், ஆபத்தான முறையில் ‘’டைவ்’’ அடித்து குளிக்கின்றனர். இதனால், சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக பயன்படும் தண்ணீர் அசுத்தமடைகிறது.மேலும், நீச்சல் தெரியாத சிறுவர்கள் நிலைதடுமாறி, கால்வாய்க்குள் இழுத்துச் செல்லப்படும் அபாய சூழல் ஏற்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் தடை விதித்தும், தடையை மீறி இதுபோன்ற செயல்களில் இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளனர். எனவே, தடையை மீறி கால்வாயில் குளிப்பவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : water opening ,Pondi Lake ,lakes ,Chembarampakkam ,Pullam ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!