×

பாதை வசதி இல்லாத எர்ணாவூர் மயானம் சடலத்துடன் தண்டவாளத்தை கடக்கும் அவலம்

* பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
* சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

திருவொற்றியூர்: எர்ணாவூர் மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால்,  ரயில்வே தண்டவாளத்தை கடந்து பொதுமக்கள் சடலத்தை சுமந்து செல்கின்றனர். இதனால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருவொற்றியூர் மேற்கு பகுதியில்  சத்தியமூர்த்தி நகர், சண்முகபுரம், ராமநாதபுரம், எர்ணாவூர், முல்லைநகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட 25 நகர்களில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால், அவர்களது உடலை எர்ணாவூர் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம்.

இப்பகுதியில் இருந்து  சுமார்  5 கிலோ மீட்டர் தூரம் சடலத்துடன் நடந்து சென்று, எர்ணாவூர் மேம்பாலம் அல்லது கத்திவாக்கம் மேம்பாலத்தின் மீது ஏறி சுற்றித்தான் எர்ணாவூர் மயானத்திற்கு செல்ல வேண்டும். இது மிகவும் சிரமம் என்பதால்,  எர்ணாவூர் மேம்பாலத்தையொட்டி உள்ள தண்டவாளத்தை கடந்து சென்று, இறுதி சடங்குகளை செய்து வருகின்றனர். இந்த தண்டவாள பகுதியில் மின் விளக்கு இல்லாமல், இருள் சூழ்ந்து இருப்பதால் உடலை அடக்கம் செய்துவிட்டு இரவு நேரங்களில் இந்த ரயில்வே தண்டவாளத்தை கடந்து வரும் பொதுமக்கள்  ரயில்கள் மோதி உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும், வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெறுகிறது.

அதுமட்டுமன்றி. சுனாமி குடியிருப்பில் இருந்து எர்ணாவூருக்கு வருவதற்கு  போதிய பேருந்து வசதி இல்லாததால்  அப்பகுதி மக்கள் இந்த தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணிகள், மாணவ, மாணவியர் கூட இந்த ரயில்வே பாதையை தாண்டி தான் மருத்துவமனை அல்லது பள்ளிக்கு சென்று வருகின்றனர். இவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், இந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற பல்வேறு கட்சிகளும் கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே  ரயில்வே துறை நிர்வாகம் எர்ணாவூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ernaavoor Mayanam ,road ,railway ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...