×

சென்னை ஐஐடி வளாகத்தில் கேரள மாணவி தற்கொலை

சென்னை: ஐஐடி வளாகத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கிண்டி, ஐஐடி வளாகத்தில் உலகின் தலை சிறந்த பொறியியல் வல்லுனர்களை உருவாக்கும் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் கேரளா மாநிலம், கொல்லம், கிளிகொல்லூர் கிராமத்தை சேர்ந்த பாத்திமா லதீப் (18). இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள சரவியூ  விடுதி அறை எண் 349ல் தங்கியிருந்து முதலாம் ஆண்டு எம்.ஏ (கியூமனேட்டீஸ்) பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கியிருந்து படித்து வருவதால் இரவு நேரங்களில் தன்னுடைய  வீட்டிற்கு போன் செய்து பேசிய பிறகு தான் தூங்கச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருடைய தாய் சஜிதா லதீப் தன்னுடைய மகளுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரம் போன் செய்து பார்த்தும் மகள் போனை எடுக்காததால் மனவருத்தத்தில் தூங்க  சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை எழுந்தவுடன் போன் செய்துள்ளார். அப்போதும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த தாய், அவருடைய தோழிகளுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் பாத்திமா லதீப்பின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதிக நேரம் தட்டிப் பார்த்தும் கதவு திறக்காததால் இது குறித்து அவர்கள் விடுதியின் ஊழியர்களிடம் சென்று விவரத்தை கூறியுள்ளனர். இதையடுத்து விடுதி ஊழியர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாத்திமா லதீப் மின்விசிறியில் நைலான் கயிற்றினால் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய ெபற்றோர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாத்திமா லதீப் பள்ளிப்படிப்பை வீட்டில் இருந்தே படித்து வந்துள்ளார். தற்போது குடும்பத்தை பிரிந்து விடுதியில் தங்கியிருந்தது படித்து வருவதால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இந்நிலையில் கடந்த வாரம் நடந்த இன்டர்னல் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தாக கூறப்படுகிறது. அது முதலே மனஉளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த  காரணத்திற்காக தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஐஐடி உள்ள விடுதி தங்கி படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  


Tags : student ,Kerala ,suicide ,campus ,IIT ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...