×

இரவு நேரத்தில் ஒரே வழித்தடத்தில் அணிவகுக்கும் மாநகர பேருந்துகள்: இதர வழித்தடங்களில் பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் எம்டிசி பஸ்கள் ஒரே வழித்தடத்தில் தொடர்ந்து இயக்கப்படுவதால், மற்ற வழித்தடங்களில் சேவை கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி) சார்பில் தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் குறிப்பிட்ட  சில வழித்தடங்களில் முறையாக இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, இரவு நேரத்தில் இயக்கப்படும் பஸ்கள் தொடர்ந்து ஒரே வழித்தடத்தில் செல்கின்றன. இதனால் மற்ற வழித்தடங்களில் பொதுமக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு காத்திருந்தும் பஸ்கள்  கிடைக்காததால், வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். இதுஒருபுறம் இருக்க, ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் யாருமின்றி காலி பஸ்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால், நிர்வாகத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, கேளம்பாக்கம் - கோயம்பேடு வழித்தடம் (த.எ.570), திருவான்மியூர் - கோயம்பேடு வழித்தடம் (த.எ.எம்-70), பூந்தமல்லி - திருவெற்றியூர் வழித்தடம் (த.எ.101), பிராட்வே - கோயம்பேடு வழித்தடம் (15பி), திருவான்மியூர் - தாம்பரம்  வழித்தடம் (த.எ.95) உள்ளிட்டவற்றில் மட்டும் இரவு நேரத்தில் அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட பஸ்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்று அணிவகுத்து செல்கின்றன. ஆனால், மற்ற  வழித்தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், மக்கள் பயணிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, அண்ணாசதுக்கம் - கிண்டி வழித்தடம் (த.எ.45பி), திருவான்மியூர் - தாம்பரம் வழித்தடம் (த.எ.91), பிராட்வே - தாம்பரம் வழித்தடம் (த.எ.21ஜி), திருவான்மியூர் - கீழ்கட்டளை வழித்தடம் (எம்.1) போன்றவற்றில் 30 நிமிடம் அல்லது ஒரு  மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் இரவில் இயக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இரவு 10 மணிக்கு மேல், மேற்கண்ட வழித்தடங்களில் பல நேரங்களில் பஸ்கள் இயக்கப்படுவதே இல்லை. இதனால், பணி முடித்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தும்  பஸ் வராததால், வேறு வழியில்லாமல் கூடுதல் பணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘எம்டிசி சார்பில் இயக்கப்படும் அனைத்து வழித்தட பஸ்களும் தினசரி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சர்வீஸ்களை கண்டிப்பாக இயக்க வேண்டும் என்பது விதி. அதுவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ள நேரங்களில்  இயக்கப்பட வேண்டும்.
ஆனால், இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் இயக்க வேண்டிய பல பஸ்கள், அதற்கு முன்பே இயக்கப்பட்டு, பணிமனைகளில் நிறுத்தப்படுகின்றன. இதனால், இரவில் 10 மணிக்கு மேல் பணி முடிந்து வீடு திரும்புவோர், தினசரி கடும்  இன்னலை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பஸ்நிலைய நேர காப்பாளர், மேலாளர் உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்தாலும் முறையான பதில் இல்லை. எனவே அனைத்து வழித்தடங்களிலும் பஸ்களை முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : route ,passengers ,
× RELATED நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்...