×

கயத்தாறு மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கயத்தாறு நவ.8: பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் புகார் எதிரொலியாக கயத்தாறு - மதுரை மெயின் ரோட்டில் கடைகளினால் ஆக்கிரமித்து போடப்பட்ட பந்தல்கள், சிமென்ட் தளங்களை அதிகாரிகள் அகற்றினர். கயத்தாறு- மதுரை மெயின் ரோட்டில் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இருபுறமும் உள்ள கடைகளினால் கழிவுநீர் ஓடையை சிமென்ட் சிலாப்புகளினால் மூடி கடையின் முன்புறம் மண் நிரப்பப்பட்டிருந்தது. மேலும் கடைகளின் முன்புறம் பல அடி நீளத்துக்கு ஓலை மற்றும் தகரசெட் மூலம் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இது வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது. மழைக்காலங்களில் மழைநீர், கழிவு நீரோடைக்கு செல்ல வழியில்லாமல் ரோட்டிலேயே தங்கியது. இதனால் ரோடு விரைவில் சேதமடைந்தது. மேலும் கடைகள் முன் போடப்பட்டிருந்த மண் சரிந்து கழிவு நீரோடையில் அடைப்பு ஏற்பட்டது. மேலும் ரோட்டின் மேல்புறம் மற்றும் கீழ்புறம் உள்ள வீடுகளில் இருந்துவரும் கழிவுநீரும் இந்த ஓடையிலேயே கலக்கிறது.

மெயின் ரோட்டில் அமைந்துள்ள கழிவு நீரோடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தெருக்களிலும் வரும் கழிவுநீரும் செல்ல வழியின்றி தேங்கியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கயத்தாறு பேரூராட்சியில் பலமுறை முறையிட்டனர். இதையடுத்து பேரூராட்சியினர் அளித்த புகாரின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண் மேடுகள், கழிவு நீரோடைகளை மூடியிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டன. பலவருடங்களாக அள்ளப்படாமல் இருந்த சாக்கடை கழிவுகளையும் கயத்தாறு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கோவில்பட்டி உதவி கோட்ட பொறியாளர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி பொறியாளர் விக்னேஷ், சாலைப்பணி ஆய்வாளர் சிவலிங்கம், சுடலை மணி, உத்தண்டராமன் மற்றும் சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, கயத்தாறு மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு மட்டு–்ம் நின்றுவிடாமல் வாரம் ஒருமுறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆக்கிரமித்திருந்தால் அதனை அகற்ற வலியுறுத்தியும், கடையின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்க வேண்டும் என்றனர்.

Tags : Kayattaru Main Road ,
× RELATED குண்டாசில் இருவர் கைது