×

விஐபிக்களால் விழிபிதுங்கும் பழநி ரோப்கார்

பழநி, நவ. 8: பழநி கோயிலுக்கு முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது ரோப்காரில் பக்தர்கள் பயணிக்க முடியாமல் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்களும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும் இயக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் பழநி கோயிலில் ரோப்கார் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடங்கள் ஆகும். 4 பெட்டிகள் மேலே செல்லும் போது, 4 பெட்டிகள் கீழே வரும் வகையில் ஜிக்பேக் முறையில் இயக்கப்படுகிறது.

ரோப்காரில் மேலே செல்லும்போது 15 பேரும், கீழே இறங்கும் போது 13 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஒரு மணி நேரத்தில் சுமார் 400 பேர் வரை மட்டும் பயணிக்கலாம். தமிழகத்தில் முதன்முதலாக பழநி கோயிலில் மட்டுமே தற்போது ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ரோப்காரில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தற்போது ரோப்கார் முக்கிய பிரமுகர்களின் பிடியில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறது. விசேஷ நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் மட்டுமின்றி, சாதாரண நாட்களில் வரும் முக்கிய பிரமுகர்களின் வருகையின்போதும் ரோப்காரில் பக்தர்கள் பயணிக்க பலமணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே, முக்கிய பிரமுகர்கள் மலைக்கு செல்வதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மக்கள் எழுச்சி பேரவை நிர்வாகி நாகுஜி கூறியதாவது, முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது அவருடன் பலர் வருகின்றனர். முக்கிய விசேஷ நாட்களில் பலரும் முக்கிய பிரமுகர் என கூறிக்கொண்டு சிறப்பு வழியில் வந்து ரோப்காரை ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால் வரிசையில் நிற்கும் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. 2வது ரோப்கார் அமைய இன்னும் 1 வருடத்திற்கு மேல் ஆகும் என்பதால், தற்போது மாற்று ஏற்பாடாக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய வின்ச்சை மட்டுமே கோயில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். ரோப்காரில் வரிசையில் நிற்காமல் நேரடியாக பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது. 2வது ரோப்கார் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது.  எனவே, அதுவரை ரோப்காரில் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு வரிசையை கோயில் நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். இதனால் வரிசையில் பலமணி நேரம் பக்தர்கள் காத்திருப்பது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...