×

ஊட்டி - சோலூர் சாலையில் தடுப்புச்சுவர் இடிந்ததால் விபத்து அபாயம்

ஊட்டி.  நவ. 8: ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின்போது ஊட்டியில் இருந்து சோலூர்  செல்லும் சாலையில் சாண்டிநல்லா சந்திப்பு பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து  விழுந்தது. இப்பகுதியில் புதிதாக தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால்  விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம்  துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை போக்கு காட்டி வந்தது. ஆனால், ஆகஸ்ட்  மாதம் யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஒரு வாரம் மாவட்டம் முழுவதும் மழை  கொட்டியது. குறிப்பாக, ஊட்டி, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட  பகுதிகளில் மழை பொழிவு மிகவும் அதிகமாக இருந்தன.

100க்கும் மேற்பட்ட  இடங்களில் மண் சரிவகள், தடுப்பு சுவர் இடிந்து விழுந்தன. இதனால், தேசிய  நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டது.  ஊட்டியில் இருந்து சோலூர் செல்லும் சாலையில் சாண்டிநல்லா அருகே (7வது மைல்)  பகுதியில் மழை நீர் காற்றாறு போல் ஓடியதில், அப்பகுதியில் இருந்த தடுப்புச்சுவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. தடுப்பு சுவர் இல்லாத நிலையில்,  மீண்டும் இச்சாலை பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இவ்வழியாக  செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.  எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சாண்டிநல்லா  சந்திப்பு பகுதியில் போர்க்கால அடிப்படையில் தடுப்புச்சுவர் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : accident ,road ,Ooty - Solaur ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்