×

மேவளூர்குப்பத்தில் அவலம் இலவச பாராக மாறிய அரசு உயர்நிலைப் பள்ளி

பெரும்புதூர், நவ. 8: மேவளூர்குப்பம் ஊராட்சியில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளி குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது.பெரும்புதூர் ஒன்றியம் மேவளூர்குப்பம் ஊராட்சியில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு மேவளூர்குப்பம், நயபாக்கம், கிருஸ்து கண்டிகை, படூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  படிக்கின்றனர்.இந்த பள்ளிக்கு போதிய கட்டிட வசதி இல்லாமல் இருந்தது. இதனால், இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று மேவளூர்குப்பம் முன்னாள் ஊராட்சி தலைவர் கோபால் தலைமையில் அப்பகுதி மக்கள், காஞ்சிபுரம் மாவட்ட  கல்வி துறை அதிகாரிக்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.அதன்பேரில், மத்திய அரசின் திட்டமான ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் ₹1.68 கோடியில் 8 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வு கூடம், கழிப்பறை, ஆசிரியர் ஓய்வறை அடங்கிய புதிய பள்ளி கட்டிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டி  திறக்கப்பட்டது. இங்கு மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தி, அவர்களுக்கு பரிசு வழங்குவதற்காக விழா மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த பள்ளியை சுற்றி மாந்தோப்பு அமைந்துள்ளது. பின்புறம் குளம் உள்ளது. பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும்போது, சுற்றுச்சுவர் எழுப்பினர். ஆனால், சுமார் 3 அடி உயரத்தில் சுவர் வைத்துள்ளதால், சமூக விரோதிகளுக்கு  இடையூறு இல்லாமல் அமைந்துவிட்டது.இதை பயன்படுத்தி, சுவரை தாண்டி குதித்து உள்ளே செல்லும் மர்மநபர்கள், பள்ளி வளாகத்த்தில் அமர்ந்து கூட்டம் கூட்டமாக மது அருந்துகின்றனர். மேலும், மழை காலமாக இருந்தால், பள்ளி விழா மேடையில் அமர்ந்து ‘ரிலாக்ஸாக’ குடித்து  விட்டு செல்கின்றனர்.சில நேரங்களில், போதை தலைக்கேறியதும், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, மதுபாட்டில்களை உடைத்து அடிதடியில் ஈடுபடுகின்றனர். விழாமேடை அருகே புதர்கள் மண்டி கிடக்கின்றன. இந்த பகுதியில் மதுபாட்டில்கள், உணவு கழிவுகளை  வீசி செல்கின்றனர். இதனால், மறுநாள் காலையில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கடும் வேதனை அடைகின்றனர்.இதுதொடர்பாக பெரும்புதூர் போலீசில் பலமுறை புகார் செய்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மேவளூர்குப்பம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதே பகுதியை சேர்ந்த சில சமூக விரோதிகள், இரவு நேரத்தில் இந்த பள்ளி வளாகத்தில் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மது  அருந்துகின்றனர். மேலும், போதை தலைக்கேறியதும், மது பாட்டில்களை பள்ளி வளாகத்தில் உடைத்து விடுகின்றனர். இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.மேலும், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் சிலர், இந்த பள்ளி வளாகத்தை லாட்ஜாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதுபற்றி பெரும்புதூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, பள்ளி வளாகத்தில் மது அருந்தும் சமூக விரோதிகள் மீது எடுக்க மாவட்ட நிர்வகம், பள்ளி கல்வி துறை, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Government High School ,
× RELATED பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்...