×

மலைக்கிராம மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்

தேனி, நவ. 7: தேனி மாவட்டம் வருஷநாட்டில் மேகமலை வனத்திற்குள் வசிக்கும் 444 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான நிலம் மற்றும் நிதியுதவி கொடுத்த பின்னர், அவர்களை வெளியேற்ற வேண்டும் என போலீசார் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.தேனி மாவட்டம் மேகமலை வனத்தில் வருஷநாடு பகுதியில் வண்டியூர், இந்திராநகர், பொம்மராஜபுரம், அரசரடி பகுதிகளில் 444 குடும்பங்கள் வனத்திற்குள் உள்ளன. இவர்களை வெளியேற்றுவதில் வனத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த கிராமங்கள் தற்போது நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. இந்த கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுத்தருவதில் நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் இந்த மக்களை இங்கிருந்து வெளியேற்றும் முன்னர் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மாற்று இடம் வழங்க வேண்டும் என வனத்துறையுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் வனத்தில் ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வனத்துறை சட்டத்தில் இடமில்லை என கை விரித்து விட்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மூலம் தங்களது பரிந்துரையினை அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘இந்த மக்களை வெளியேற்றியே ஆக வேண்டும் என்பதில் வனத்துறை உறுதியாக உள்ளது. இவர்களது வசிப்பிடம் மூலவைகையின் பிறப்பிடமாக இருப்பதால், எங்களால் எவ்வளவோ முயன்றும் வனச்சட்டத்தை மீறி இக்கிராம மக்களுக்கு உதவ முடியவில்லை. 444 குடும்பங்களின் நலன் முக்கியமாக, ஒண்ணரை கோடி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய வாழ்வாதாரம் முக்கியமா என உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே இவர்களை வெளியேற்றும்போது, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்’ என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்’ என்றனர்.

Tags : hill ,location ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!