×

முத்தனேந்தலில் பஸ் வரும் வரை மழை, வெயிலில் காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

மானாமதுரை, நவ.7: மதுரை ராமேஸ்வரம் நான்கு நெடுஞ்சாலையில் முத்தனேந்தல் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை, திருப்பூர், கோவை செல்லும் அரசு மற்றும் தனியார்  தொலை தூர பேருந்துகளும் இந்த தேசியநெடுஞ்சாலையில் தான் செல்கின்றன. இந்த வழியாக செல்லும் பேருந்துகளில் முத்தனேந்தல், கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், வாகுடி, இடைக்காட்டூர், பதினெட்டாங்கோட்டை உள்ளிட்ட 34 கிராம மக்கள் முத்தனேந்தல் பஸ்ஸ்டாப்பில் நின்று தான் செல்கின்றனர். இது தவிர புகழ்பெற்ற இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச், இடைக்காட்டூர் சித்தர் கோயில், கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி சித்தர், மாயாண்டி சுவாமி சித்தர் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் பக்தர்களும் இங்கு நின்று தான் பேருந்தில் செல்கின்றனர்.இவ்வாறு முக்கிய பஸ்ஸ்டாப்பாக இருக்கும் முத்தனேந்தல் பகுதியில் நான்குவழிச்சாலை பணிகள் துவங்கும்போது பஸ்ஸ்டாப்பில் இருந்த நிழற்குடை இடிக்கப்பட்டது. கிராமத்தினர் கேட்டபோது சாலை அமைத்தபின் நிழற்குடை அமைக்கப்படும் என்று தெரிவித்த நிறுவனம் பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் நிழற்குடை அமைக்க வில்லை. இது குறித்து நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் காரைக்குடி, மதுரைக்கு சென்று நேரில் மனு கொடுத்தும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் இந்த நான்குவழிச்சாலையில் பேருந்து நிழற்குடை இல்லாததால் வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் இரவு, பகலாக வெயிலிலும், மழையிலும், நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நான்கு வழிச்சாலையில் இருபுறமும்(கிழக்கு-மேற்கு) பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பேருந்து பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பேருந்து நிழற்குடை இல்லாததால் பயணிகள் நான்குவழிச்சாலையில் சாலையோரத்தில் காத்திருக்கின்றனர். இதனால் சாலை விபத்துகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே பேருந்து பயணிகளின் நலன் கருதி தகுந்த அதிகாரிகள் இந்த பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், நான்குவழிச்சாலைக்காக இடிக்கப்பட்ட நிழற்குடையை மீண்டும் கட்டித்தர வேண்டும். இப்பகுதி மக்கள் மழை, வெயில் காலங்களில் பஸ் ஏறும்வரை மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே உடனடியாக இப்பகுதியில் மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்

Tags : passengers ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!