×

தூத்துக்குடி வீதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதில் அலட்சியம் மாநகராட்சிக்கு கீதாஜீவன் எம்எல்ஏ கண்டனம்

தூத்துக்குடி, நவ.7: தூத்துக்குடியில் பெய்த மழையால் வீதிகளில் நாட்கணக்கில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றுவதில் அலட்சியம் காட்டுவதாக மாநகராட்சிக்கு கீதாஜீவன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் அண்மையில் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் பல்வேறு பகுதிகளில் நாட்கணக்கில் தேங்கி நிற்கிறது. ஆண்டுதோறும் மழைக்காலத்தில் லூர்தம்மாள்புரம், கலைஞர்நகர், சங்குகுளி காலனி, அன்னைதெரசா மீனவர் காலனி, எஸ்.கே.எஸ்.ஆர். காலனி, பாக்கியநாதன்விளை, வெற்றிவேல்புரம், ராஜிவ்காந்திநகர், மகிழ்ச்சிபுரம், பிஅன்ட்டி காலனி, சக்திவிநாயகர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இப்பகுதிகளில்  கழிவுநீர் செல்ல வழியின்றி சாலை அமைக்கப்பட்டதால் இத்தகைய அவலம் தொடர்கிறது. இதனால் மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் சுகாதாரகேடு நிலவுகிறது.

இந்தாண்டு வி.எம்.எஸ்.நகர், சின்னகண்ணுபுரம் குடியிருப்பு பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சி.வ.கண்மாய் சீரமைப்பு பணியின்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு மேற்கு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரை கண்மாய்க்கு செல்லவிடாமல் தடுத்துநிறுத்தியது முக்கியக் காரணமாகும்.
மேலும் முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணராஜபுரம் 1,2,3 தெருக்கள் மகிழ்ச்சிபுரம், பாரதிநகர், நிகிலேசன் நகர், புஷ்பாநகர், குறிஞ்சிநகர், பெரியசாமிநகர், சக்திவிநாயகர்புரம், ராஜகோபால்நகர், அன்னை இந்திராநகர், கோயில்பிள்ளைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் ஒருமாதமாகியும் அகற்றப்படாததால் மழைநீரோடு கலந்து நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கிநிற்கும் மழைநீரை வெளியேற்ற முன்னெச்சரிக்கையாக கழிவுநீர் வண்டி மற்றும் இன்ஜின், பம்புகள் மாநகராட்சி நிர்வாகம் தயார் செய்யாமல் அலட்சியத்துடனும், மெத்தனத்துடன் இருந்து வருகிறது.

இதேபோல் புதிய தீர்வைபோடுதல், புதியவீட்டு எண் வழங்குதல், கட்டிட வரைபடம் அனுமதி உள்ளிட்ட அடிப்படை பணிகளும் நடக்கவில்லை. இதற்காக விண்ணப்பித்தவர்கள் ஓராண்டாக காத்திருக்கின்றனர். எம்எல்ஏ என்ற முறையில் எனக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை மாநகரில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்தும் இதுவரை அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள்கூட துவங்கவில்லை. குறிப்பாக மேட்டுப்பட்டியில் ரூ.30 லட்சத்தில் குடிநீர் வசதி, பிஅன்ட்டி காலனி 3வது தெரு சாலை, வி.எம்.எஸ்.நகரில் தெருவிளக்குகள் உள்ளிட்ட அனைத்துப்பணிகளையும் கிடப்பில் போட்டுள்ளது. மேட்டுபட்டி, சங்குகுளி காலனி, சத்யாநகர், ராஜபாண்டிநகர், சூசைநகர், இனிகோநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு இணைப்பு,  பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்.

இதனிடையே கனிமொழி எம்.பி.யும், நானும் விடுத்த கோரிக்கையை ஏற்று வஉசி துறைமுக சபை 4 நாட்கள் தீயணைப்புத்துறை வண்டிகளை அனுப்பிவைத்து வெற்றிவேல்புரம், கோயில்பிள்ளைநகர், ராஜிவ்காந்திநகர் போன்ற பகுதிகளில் மழைநீரை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.  எனவே, மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து நிரந்தரத்தீர்வாக கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து பொது சுகாதாரத்தை காத்திட வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை  வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Geethajeevan MLA ,Corporation ,streets ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில்...