×

குப்பை கிடங்கில் மழைநீர் தொற்றுநோய் பரவும் அபாயம் கண்டுகொள்ளாத நகராட்சி

காரைக்குடி, நவ.7: காரைக்குடி அருகே ரஸ்தா பகுதியில் காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதி குப்பைகள் சேகரித்து வைக்கப்படும் கிடங்கை சுற்றி தற்போது  மழையின் காரணமாக  தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடி பகுதியில் 36 வார்டுகளில்  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வீடுகள் மற்றும் ஓட்டல் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களில் இருந்து தினமும் 48 டன்களுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.  குப்பைகள் தனியார் மற்றும் நகராட்சி பணியார்களை கொண்டு தினமும் பெறப்படுகிறது. இது மொத்தமாக லாரிகள் மூலம் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் 13.70 ஏக்கரில் உள்ள உரக்கிடங்கு மற்றும் நிலம் நிரப்பும் இடத்தில்  கொட்டப் படுகிறது. இந்த குப்பை கிடங்கு பகுதிக்கு அருகில் காதிநகர், வசந்தம் நகர், பழைய செஞ்சை, நகாவயல் ரோடு, பழைய சங்கராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.  இச்சாலை வழியாகத்தான், தேவகோட்டை, ராமேஸ்வரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால்  குப்பை கிடங்கில் குப்பையை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஓட்டல் கழிவுகள் உள்பட பல்வேறு குப்பை பொருட்க­ளோடு தண்ணீரும் சேர்ந்து நிற்பதால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் தேவகோட்டை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் காரைக்குடி நகராட்சி குப்பை கிடங்கின் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கற்றின் மூலம் பரவும் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளது. குப்பைகளில் இருந்து வெளியேறும் நீர் நிலத்தடி நீரை மாசுபடசெய்கிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள போர் மற்றும் கிணறுகளில் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் உள்ளதாகவும். இதனை பயன்படுத்துவர்களுக்கு அரிப்பு உட்பட பல்வேறு தோல் சம்மந்தப்பட்ட நோய் மற்றும் தொடர்காய்ச்சல் உட்பட மர்மநோய் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : garbage warehouse ,
× RELATED சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 9.6 டன்...